சென்னை:
இந்தி மொழி வெறி அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் ஆயுஷ் துறை யோகா மற்றும் இயற்கை மருத்துவம் தொடர்பான இணைய தள பயிற்சி வகுப்புகளை நடத்தத் தொடங்கியுள்ளது.இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட தமிழக மருத்துவர்கள், பயிற்சி குறித்த விபரங்களையும், பயிற்சியினையும் இந்தி மொழியில் மட்டுமே நடத்துவது சரியல்ல.இந்தி பேசாத மாநிலங்களை சார்ந்த எங்களைப் போன்றவர்களுக்கு அதனை புரிந்து கொள்ள இயலாது என்று கூறியுள்ளனர்.இதனைக் கேட்டவுடன், ஆயுஷ் துறை செயலாளர் ராஜேஷ் கோடேச்சா என்ற இந்தி வெறி அதிகாரி கொந்தளித்து. இந்தி தெரியாதவர்கள் எல்லாம்வகுப்பில் இருந்து வெளியேறலாம் எனக் கட்டளையிட்டுள்ளார்.
யாரெல்லாம் அப்படிச் சொன்னவர்கள் என்ற பட்டியலை கொடுங்கள், அவர்கள் மீது தலைமைச் செயலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக மிரட்டியுள்ளார்.இந்தி மொழியை தீவிரமாக திணிப்பதற்காகவே, ராஜேஷ் கோடேச்சா போன்ற இந்தி வெறியர்களுக்கு, ஓய்வு வயது தாண்டியும் மத்திய அரசுபணி நீடிப்பு வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.ஆயுஷ் துறையின் செயலாளரின் தேச ஒற்றுமையை சீர்குலைக்கும், தமிழ் மொழியை அவமதிக்கும் நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.இது போன்ற மொழி வெறியர்களின் மீது மத்திய அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வரை மத்திய அரசு நடத்தும் பயிற்சி வகுப்புகளிலும், மத்திய அரசு நடத்தும் கூட்டங்களிலும் தமிழக அதிகாரிகள் பங்கேற்க மாட்டார்கள் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.