tamilnadu

img

ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு! - சிபிஎம் கண்டனம்

ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
"ஒன்றிய நிதிமையச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பற்றி வெறும் வார்த்தை விளையாட்டுக்களைத் தான் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். நான்கில் மூன்று இந்தியருக்கு மாத வருமானம் ரூ.15 ஆயிரம் கூட இல்லாத நிலையில், அதிகரித்து வரும் சுகாதார, கல்வி மற்றும் அத்தியாவசிய செலவுகளை சமாளிக்க முடியாமல் ஏழை, எளியக் குடும்பங்கள் திணறி வருகின்றனர். இந்த சூழலில் ஏழை, எளிய மக்களின் நலன்களை மையமாக கொண்ட   பொருளாதார வளர்ச்சிக்கான அறிவிப்புக்கள் எதையும் நிர்மலா சீத்தாராமன் வெளியிடவில்லை.
பட்ஜெட்டில் உர மானியம் ரூ.3400 கோடிகளும், பெட்ரோலிய மானியம் ரூ.2,600 கோடிகளும் குறைக்கப்பட்டுள்ளது. இவை இரண்டுமே விவசாயத்தையும், எரிவாயு விலைகளையும் கடுமையாக பாதிக்கும். இதனால் ஏழைக் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். உணவு மானியம் சற்று உயர்ந்தது போல தெரிந்தாலும் விலைவாசியை ஒப்பிடும்போது அது உயரவில்லை. எனவே, இது உணவுப் பொருட்கள் விலைகளை அதிகரிக்க செய்திடும். பி.எம். கிசான் நிதி, பயிர்க்காப்பீட்டுக்கான நிதிகள் எதுவும் உயர்த்தப்படவில்லை.
ஒன்றிய அரசினுடைய ஜி.எஸ்.டி வரிவிதிப்பு உள்ளிட்ட பல்வேறு கொள்கைகளால் மிகவும் மோசமாக நலிவடைந்துள்ள சிறு,குறு நடுத்தர தொழில்களை பாதுகாக்கவும், வலுப்படுத்தவும் எந்த ஆக்கப்பூர்வமான அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
அதேபோன்று பெரிதும் எதிர்பார்த்த விவசாய விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்துவது, வேளாண் கடன்களை தள்ளுபடி செய்வது, இடுபொருட்களுக்கான விலைகளை குறைப்பது பற்றி எந்த அறிவிப்பையும் நிதியமைச்சர் அறிவிக்காமல் விவசாயம் குறித்து வெறும் வார்த்தை ஜாலம் மட்டுமே இடம்பெற்றுள்ளது.
தொடர்ந்து கிராமப்புற உழைப்பாளி மக்கள் போராடி வரும் 100 நாள் வேலை திட்டத்திற்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு, வேலை நாட்களை அதிகரிப்பது, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வேலையளிப்பது போன்ற எந்த அறிவிப்பும்  இந்த பட்ஜெட்டில் இல்லை.
அதிகரித்து வரும் வேலையின்மை, ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதார மேம்பாடு, தொடர்ந்து உயர்ந்து வருகிற அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்துவது, பெட்ரோல் - டீசல் விலை குறைப்பு, சமையல் எரிவாயு விலை குறைப்பு உள்ளிட்ட அடித்தட்டு மக்களின் நலன்களுக்கான எந்த நடவடிக்கைகளும் இந்த பட்ஜெட்டில் இல்லை.
ஒன்றிய அரசின் துறைகளில் லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்புகிற திட்டமும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான எந்த திட்டமும்  பட்ஜெட்டில் இல்லை.  சமூக பாதுகாப்புடன் கூடிய வேலை வாய்ப்பினை உருவாக்க எந்த முயற்சியும் இல்லை. தொழிற்சங்கங்களின் கோரிக்கையான மாதம் ரூபாய் 26,000/- குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படவில்லை.
ஜிக் (GIC) தொழிலாளர்களுக்கு என்று அறிவிக்கப்பட்ட சில அறிவிப்புகள் அவர்களது வேலை நிலைமைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு உதவிடாது. கடுமையான பணிச்சுமையிலும் ஊதியப் பற்றாக்குறையிலும், சுரண்டல்களிலும் வாடிக் கொண்டிருக்கிற இந்த துறை தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கான திட்டம் எதுவும் பட்ஜெட்டில் இல்லை.
மாறாக, மென்மேலும் தீவிரமாக காப்பீடு, வங்கி போன்ற பொதுத்துறை நிறுவனங்களை சீரழிக்கும் வகையில் தனியாருக்கு தாரை வார்க்கிற நடவடிக்கைகளையே ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து வருகிறது. இந்த பட்ஜெட்டிலும் காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 74 சதவீதத்தில் இருந்து, 100 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு வெளிநாட்டு கம்பெனிகளுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. காப்பீட்டுத்துறையில் தனியார் ஆதிக்கம் அதிகரித்தால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிப்புக்குள்ளாவார்கள். மின்சாரத்தை தனியார்மயமாக்கிட மாநிலங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அணுமின்துறையை தனியார்மயமாக்க வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த பட்ஜெட்டில் தமிழகம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, புயல் மற்றும் வெள்ளம் பேரிடர் நிவாரணங்களுக்கு இந்த பட்ஜெட்டில் எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. மிகவும் வஞ்சிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. அதே நேரத்தில் தங்களது ஆட்சியை முட்டுக்கொடுத்துக் கொண்டுள்ள கட்சிகளை திருப்திபடுத்தும் வகையிலும், சட்டமன்ற தேர்தல்களை கணக்கில் கொண்டும்  பீகார் மற்றும் டில்லி போன்ற மாநிலங்களுக்கு கூடுதலான அறிவிப்புகளை  நிர்மலா சீத்தாராமன் வெளியிட்டுள்ளார்.
இந்த பட்ஜெட்டிலும்  தமிழ்நாட்டிற்கான ரயில்வே வளர்ச்சி திட்டங்கள், நெடுஞ்சாலைகள், மதுரை, கோவை மெட்ரோ திட்டம் போன்ற அறிவிப்புகள் எதுவும் இல்லை. தொடர்ந்து பாஜகவினால் புறக்கணிக்கப்படும் மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. பட்ஜெட்டிலும் தங்களது அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ள பாஜகவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
மேலும், காஷ்மீர், மணிப்பூர் மாநிலங்கள் கலவரம் மற்றும் வன்முறைகளை சந்தித்து மிகவும் பின்தங்கியுள்ள நிலையில் இம்மாநிலங்களை மேம்படுத்துவதற்கும், புனரமைப்பதற்கும் எந்த வகையிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. பாஜக அரசின் பழிவாங்கும் போக்கையே இது வெளிப்படுத்துகிறது.
வேளாண், கல்வி, சுகாதாரத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி இந்த துறைகளின் தேவைகளுக்கேற்ப போதுமானதாக இல்லை. அதேபோன்று தொடர்ந்து கிராமப்புறங்களில் வறுமை மற்றும் வேலைவாய்ப்பு நெருக்கடிகளும் நீடித்து வருகின்ற நிலையில் ஊரக வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியும் போதுமானதல்ல.
கல்வி ஆராய்ச்சித் துறையில் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களை நுழைக்கும் நடவடிக்கை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அதிகரித்து வருகிற நகரமயத்தை கணக்கில் கொண்டு நகர்ப்புற ஏழைகளின் குடியிருப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. இத்துறைக்கான ஒதுக்கீடும் போதுமானதாக இல்லை. நகர்ப்புற வேலையின்மை அதிகரிப்பினால் இளைஞர்கள் கடும் இன்னல்களை சந்தித்து வரும் வேளையில்  நகர்ப்புற வேலைகளை உறுதிப்படுத்தும் அறிவிப்புகள் எதுவும் இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்கான நகரமயமாதலை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருவது இந்த பட்ஜெட்டிலும் வெளிப்பட்டுள்ளது.
சமூக நலனுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை, பெண்கள் வாழ்வாதார வளர்ச்சி மற்றும் பட்டியலின - பழங்குடியின மக்களின் கல்வி மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்கு எவ்விதத்திலும் ஏற்றதாக இல்லை. பட்டியலின - பழங்குடியின மக்களுக்கான வேலைவாய்ப்புகளுக்கு உருப்படியான திட்டங்கள் எதையும் அறிவிக்காமல் மேல்பூச்சாக சில வெற்று அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிட்டுள்ளார்.
பட்ஜெட்டில் ஒன்றிய அரசின் கடன் அதிகரிப்பு குறித்து பேசியுள்ள நிதியமைச்சர் தான் சமர்ப்பித்துள்ள 8 பட்ஜெட்டுகளிலும் பெரும் கார்ப்பரேட்டுகளுக்கும் பெருமுதலாளிகளுக்கும் தொடர்ச்சியாக வரிச்சலுகைகள், கடன் தள்ளுபடிகள் என சலுகைகளை வாரி வாரி வழங்குகிற அதே பாதையில் தான் இந்த பட்ஜெட்டிலும் அவர் பயணித்துள்ளார்.
இந்த பட்ஜெட்டில் நாட்டின் மேல்தட்டு வசதிபடைத்த வர்க்கங்களுக்கு மட்டும் பல சலுகைகளை வாரி வழங்கியுள்ள  நிதியமைச்சர் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கான எந்த அறிவிப்புகளும் வெளியிடவில்லை.
ஏழை, எளிய, நடுத்தர மக்கள் நுகர்கிற அரிசி மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரிகளில் ஒரு சல்லிக்காசு கூட குறைக்கவில்லை.
ஒட்டுமொத்தத்தில் பாஜக அரசு அனைத்து துறைகளிலும் தோல்விகளை சந்தித்து வருகிற நிலைமை  இந்த பட்ஜெட்டிலும் தொடர்கிறது. அனைத்துப் பகுதி மக்களையும் வஞ்சிக்கும் பட்ஜெட்டாகவே ஒன்றிய அரசின் பட்ஜெட் அமைந்துள்ளது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.