tamilnadu

img

நீட் விலக்கு மசோதா நிறைவேறியது.... தமிழக சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்து பாஜக துரோகம்....

சென்னை:
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் சட்ட மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த பாஜக மாணவர்களுக்கு துரோகம் செய்தது.

நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து அரசுஅமைத்த நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு ஆய்வு செய்து தனது அறிக்கையை சமர்பித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் திங்களன்று(செப்.13) முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். நீட் தேர்வு ஒரு நடுநிலையான தேர்வு முறை இல்லை என்பது ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் குழுவினர் அறிக்கையிலிருந்து தெளிவாகிறது என்றும், கடந்த 4 ஆண்டுகளில் நீட் தேர்வு சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பை சேர்ந்த மாணவர்களின் நம்பிக்கையையும் கனவுகளையும் தகர்த்திருப்பதாகவும் மசோதாவில் குறிப்பிடப் பட்டுள்ளது.நீட் தேர்வு சமத்துவமின்மையை வளர்க்கிறது. சிறப்பு பயிற்சி பெறக்கூடிய சமூகத்தின் பொருளாதார மற்றும் அதிக சலுகை பெற்ற வகுப்பினரை ஆதரிக்கிறது. சமூக நீதியை உறுதி செய்யவும் சமத்துவம் மற்றும் சமவாய்ப்பை நிலைநிறுத்தவும் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய அனைத்து மாணவர் களையும் பாகுபாடு காட்டுவதில் இருந்து பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வரப்படுவ தாகவும் கூறப்பட்டுள்ளது.இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசியமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,“நீட் என்னும் கொடிய தேர்வை கொண்டு வந்து மருத்துவக் கல்வி கனவை சிதைத்து வரும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக தமிழ்நட்டில் கடந்தநான்கு ஆண்டுகாலமாக நடந்து வரும் போராட்டங்களையும் விலை மதிக்க முடியாதமாணவர்கள் தங்களது இன்னுயிரை இந்தப் போராட்டத்துக்கு தாரைவார்த்து மறைந்ததையும் சுட்டிக்காட்டினார்.

கடந்த அதிமுக ஆட்சியில் இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், அன்றைய ஆட்சியாளர்கள் பாஜக அரசுக்கு போதிய அழுத்தம் கொடுக்கவில்லை. அந்த நிலை இந்த ஆட்சியில் இருக்காது. இனிமேல்12 ஆம் வகுப்புத் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு ஏதுவாகத்தான் வலிமையான சட்டமுன்வடிவை கொண்டு வந்திருக்கிறோம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.மசோதா மீதான விவாதத்தின்போது திமுக கூட்டணி கட்சிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் மற்றும்  அதிமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர். நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களையும், தற்கொலை செய்து கொண்ட மாணவிகளின் பட்டியலையும் முன்னுதாரணம் காட்டி இனி நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை என்பதை வலியுறுத்தி தலைவர்கள் பேசினார்கள். பாஜக இந்த மசோதாவை ஆதரிக்காமல் வெளிநடப்பு செய்தது. இதைத்தொடர்ந்து மற்ற உறுப்பினர் களின் ஆதரவுடன் நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதா ஏகமனதாக குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.