சென்னை:
தேசியக் கொடியை அவமதித்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், எஸ்.வி சேகர், முன்ஜாமீன் கோரிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய் துள்ளார்.எம்.ஜி.ஆர். சிலைக்கு காவிப் போர்வை போர்த்தியது, பெரியார் சிலை மீது காவிச் சாயம் ஊற்றியது குறித்துக் கருத்து தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சிலைகளைக் களங்கப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.இதையடுத்து எஸ்.வி.சேகர் வெளியிட்ட வீடியோவில், காவியைக் களங்கம் எனக் குறிப்பிடும் முதலமைச்சர், தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டி விட்டுக் கொடியேற்றப் போகிறாரா எனக் கேட்டிருந்தார்.
இது தொடர்பான புகாரில் எஸ்.வி. சேகர் மீது, தேசியக் கவுரவப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டது. இந்த வழக்கில் காவல்துறையினர் தன்னைக் கைது செய்யக் கூடும் எனக் கருதிய எஸ்.வி.சேகர், முன் ஜாமீன் கோரிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் திங்கட் கிழமை விசாரணைக்கு வருகிறது.