tamilnadu

img

என்.சங்கரய்யா இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த  தலைவர் கே.வரதராசன் மறைவுக்கு கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:

தோழர் கே.வரதராசன் திடீர் மறைவு, விவசாயிகள் இயக்கத்திற்கும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மாபெரும் பேரிழப்பாகும். அவர் திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் சங்க, விவசாய தொழிலாளர் சங்கத்தை துவக்கி தமிழ்நாடு முழுவதிலும் அவர் அந்த இயக்கத்தை வளர்ப்பதற்காக அரும்பாடுபட்டார். அதனுடைய விளைவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினுடைய தலைவராகவும் பொதுச்செயலாளராகவும் நீண்டகாலம்செயல்பட்டார். அவருடைய விவசாய சங்கத்தின் அரும்பணியானது அகில இந்திய அளவில் பொதுச்செயலாளர் பொறுப்பிற்கு கட்சி அவரை உயர்த்தியது. அந்த பொறுப்பிலும் அவர் அகில இந்திய ரீதியில் விவசாயிகள் இயக்கத்திற்கு சீரிய தொண்டாற்றினார்.

தோழர் வரதராசன் அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய  திருச்சி மாவட்டச் செயலாளர் பொறுப்பிலும் பின்னர் தமிழ்மாநிலக்குழுவிலும், மாநில செயற்குழுவிலும் அதன் பின்னர் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகவும் செயல்பட்டார். அவருடைய பொறுப்புகளை ஆய்வு செய்த கட்சியின் தலைமை அவரை அரசியல் தலைமைக்குழுவுக்கு தேர்ந்தெடுத்தது.அந்த பொறுப்பிலும் அவர் விவசாயிகள் இயக்கத் திற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கும் முக்கியமான பங்காற்றினார். அவருடை திடீர் மறைவால் நமக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த துயரத்தை தாங்கிக்கொண்டு  தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களும் விவசாய இயக்க ஊழியர்களும் அவருடை  மறைவு தங்களுக்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பாக கருதிக்கொண்டு தமிழ்நாட்டில் அவர் விட்டுச் சென்ற பணியை சிறப்பாக முடிப்பதற்கும் ஒரு பலம் பொருந்திய விவசாயி மற்றும் விவசாய தொழிலாளர் இயக்கத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்ப்பதற்கும் தோழர்கள் அரும்பாடுபடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தோழர் கே.வரதராசன் மறைவால் பெரிதும் துயருற்றிருக்கும்  அவருடைய மகளுக்கும் மகனுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்க வரதராசனின் புகழ்.இவ்வாறு என்.சங்கரய்யா கூறியுள்ளார்.