அரசின் ஆலோசனையை ஏற்று எம்ஆர்எப் தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்
சென்னை, அக்.2- திருவொற்றியூர் விம்கோ நகரில் இயங்கி வரும் எம்ஆர்எப் டயர் தயாரிக்கும் தொழிற்சாலை நிர்வாகம் எந்த முன் அறிவிப்பும் செய்யாமல் ஆலையின் கதவை மூடி தொழிலாளர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதையடுத்து தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அக்டோபர் 30ஆம் தேதி தொழிலாளர் நலத்துறை ஆணையர் எம்ஆர்எப் நிர்வாகம் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து பேசினார். அப்போது செப்டம்பர் 9ஆம் தேதி என்ன நிலையில் தொழிற்சாலை இயங்கியதோ அதே நிலைக்கு திரும்ப வேண்டும். தொழிலாளர்கள் மீது பழிவாங்கல் நடவடிக்கை இருக்க கூடாது என்றும் பிற கோரிக்கைகளை சுமூகமாக பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார். சங்க நிர்வாகிகள் ஆணையரின் ஆலோசனையை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தனர். நிர்வாகம் நாம்சை ஏற்க வேண்டும் என நிபந்தனை விதித்தது. அப்போது ஆணையர் தலையிட்டு எதுவானாலும் ஆலையை திறந்து விட்டு பேசுங்கள் என்றார். அதனடிப்படையில் அக்டோபர் 1ஆம் தேதி காலை பேரவை கூட்டம் நடத்தி எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் அனைத்து தொழிலாளர்களும் பணிக்கு திரும்பினர். அப்போது அசோக்லேலண்ட் பவுண்ட்ரி டிவிசன் தொழிலாளர்கள் சார்பில் சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கே.மகேந்திரன் போராட்ட நிதி 31,332 ரூபாயை வழங்க எம்ஆர்எப் தொழிற்சங்கத்தின் செயலாளர் சுரேஷ்குமார் பெற்றுக் கொண்டார். இதில் மாவட்டச் செயலாளர் வி.குப்புசாமி, மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், பவுண்ட்ரி சிஐடியு அணி தலைவர் தனுஷ்கோடி, சிபிஎம் வடக்கு பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், பொது தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.ஆர்.முத்துசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.