சென்னை
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிக்க முடியாத அளவிற்கு ஏற்றம் இறக்கமாக உள்ளது. குறிப்பாக சென்னையில் தினசரி பாதிப்பில் சற்று மாற்றம் ஏற்பட்டாலும் மற்ற மாவட்டங்களில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு கொரோனா பரவல் வேகம் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று 3,756 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 1,22,350 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 64 பேர் பலியாகியுள்ள நிலையில், மாநிலத்தின் மொத்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1,700-யை தாண்டியுள்ளது. இன்று 3,051 பேர் கொரோனாவை வென்று வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 74,167 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 1,261 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்த பாதிப்பு 72,500 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு இன்று ஒரேநாளில் 26 பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,146 ஆக அதிகரித்துள்ளது.
மற்ற மாவட்டங்கள்
சென்னைக்கு அடுத்து மதுரையில் 379 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு 5 ஆயிரத்தை (5,057) தாண்டியுள்ளது. திருவள்ளூரில் 300 பேருக்கும், செங்கல்பட்டில் 273 பேருக்கும், வேலூரில் 160 பேருக்கும், தூத்துக்குடியில் 141 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று 253 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்த விருதுநகரில் 70 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.