பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு
சிதம்பரத்தில் ரூ.22.72 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சுற்றுலா ஓய்வு இல்லம் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் கூறுகையில், சிதம்பரம் அருகே உள்ள சுற்றுலா மையத்தில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி மேற்கொள்ளும் வகையில் 15 மோட்டார் படகுகள் மற்றும் 35 துடுப்பு படகுகள் தற்போது இயக்கப்பட்டு வரு கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் 8,13,080 உள்நாட்டு சுற்றுலா பயணிகள், 2,230 வெளிநாட்டுப் பயணிகள் வருகை புரிந்துள்ளனர் என்றார். சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்க கூடுதல் வசதிகளாக பூங்கா, திறந்த வெளி முகாம், காட்சி கோபுரம், படகு குழாம், தங்கும் அறைகள் மற்றும் உண வகம் புனரமைக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார். நியாயமான கட்டணத்தில் அனைத்து நவீன அடிப்படை வசதிகளுடன் கூடிய தங்குமிடம் ஏற்படுத்திடும் பொருட்டு சுற்றுலா ஓய்வு இல்லம் மற்றும் சுற்றுலா விளக்க மையக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் 24 தங்கும் அறைகள், கலையரங்கம் கூடம், உணவருந்தும் கூடம், சுற்றுச்சுவர், வாகன நிறுத்தம் போன்ற பணிகள் ரூ.8.65 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார். சிதம்பரம் சாராட்சியர் கிஷன் குமார், மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலர் கண்ணன், பிச்சாவரம் சுற்றுலா மைய மேலாளர் பைசல், கிள்ளை பேரூ ராட்சி மன்ற தலைவர் மல்லிகா, துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன், அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற தலைவர் பழனி, சிதம்பரம் நகர மன்ற துணை தலைவர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். அமைச்சரிடம் சிஐடியு படகு ஓட்டுநர் சங்கத்தின் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட படகு ஓட்டுநர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.