சென்னை:
குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 7,850 வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சங்கத்தின் மாநிலத் தலைவர் ந.நாராயணன், மாநில பொதுச் செயலாளர் இ.மாயமலை, மாநிலப் பொருளாளர் ஜி.ஆனந்தவல்லி ஆகியோர் சமூக நலன்-மகளிர் உரிமைத் துறைச் செயலாளர் சம்பு கல்லோலிக்கர், இணைச் செயலாளர் (சத்துணவு) செல்வராஜ், சமூக நலத்துறை இயக்குநர் ரத்னா, ஒருங்கிணைந்த வளர்ச் சிப் பணிகள் இணை இயக்குநர் கண்மணி ஆகியோரை நேரில் சந்தித்து நீண்ட கால நிலுவைக் கோரிக்கைகள் குறித்து மனு அளித்து பேசினார்கள்.அந்த மனுவில், சத்துணவு - அங்கன்வாடி ஓய்வூதியருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் 7,850 ரூபாயும், அகவிலைப்படி, மருத்துவப்படி, மருத்துவக் காப்பீடு, குடும்ப ஓய்வூதியம். குடும்பநல நிதி, இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். பணி ஓய்வுபெறும் நாளன்றே அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டும்.தாங்கள் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் நிறைவேற்றப்படும் என இன்றைய தமிழக ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொண்டு, சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை காலதாமதம் இன்றி உடனடியாக நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.