தேர்தல் பறக்கும் படையினரின் திடீர் சோதனையால் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் நடக்க இருக்கும் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படையினரும் காவல் துறையும் சேர்ந்து வாகனச் சோதனைகள் மேற்கொண்டு உரிய ஆவணங்கள் இல்லாத தங்கம், வைரம், பணம், மது பாட்டில்கள் போன்ற பொருட்களை பறிமுதல் செய்யும் சம்பவங்கள் தினசரி அரங்கேறிவருகிறது. இந்தியா முழுவதும் பறக்கும் படை வேட்டையில் பறிமுதல் செய்த பணம், தங்கம், மது போன்றவற்றின் மதிப்பு 1,354கோடி ரூபாய் என்கிறது ஒரு புள்ளி விவரம். தமிழகத்தில் 71 கோடி ரூபாயும், 313 கிலோ தங்கமும், 371 கிலோ வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள பணம், நகைகளின் மதிப்பு 185 கோடி ரூபாயாகும். நாடு முழுவதும் பணம் பறிமுதல் செய்யப்பட்டதில் குஜராத் முதலிடமும், தமிழகம் 2ஆம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.பறக்கும்படை மற்றும் காவல்துறை அதிகாரிகளின் அதிரடி வேட்டை ஒருபுறம்இருக்க ஆளும் கட்சியினரால் சத்தமில்லாமல் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்து கொண்டுதான் இருக்கிறது. முக்கியமான கட்சிகள் வாக்குச்சீட்டை ஜெராக்ஸ் எடுத்து கையில் வைத்துக் கொண்டு பூத்துக்குஎத்தனை ஓட்டுகள் என்ற பட்டியலை எடுத்து வைத்துள்ளதாகவும், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யும் பணியில் இறங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் சில அமைப்புகளின் தலைவர்களை சந்தித்துஅவர்கள் கையில் உள்ள வாக்குகளை ஒருபெரும் தொகைக்கு பேரம்பேசி கைமாற்றி விட்டதாகவும் சொல்கிறார்கள். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து அந்த 2 தொகுதிகளுக்கான தேர்தலை தேர்தல்ஆணையம் நிறுத்தி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் அங்கும் பணப்பட்டுவாடா செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. சந்தையில் விலை பேசுவது போலகட்சிகளின் நாடிபிடித்து பேரம் பேசப்பட்டதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. அதிரடிப்படையினரும், காவல் துறையினரும் வெறும் கார், வேன், லாரியை குறிவைத்து சோதனைசெய்து பல கோடி ரூபாய்களையும், நகைகளையும் பறிமுதல் செய்வதாக தினம் தினம் தகவல்கள் வெளியாகிய வண்ணம்உள்ளன. ஆனால் ஆளும் கட்சிக்காரர்கள் மோட்டார் பைக் மூலம் பணம் எடுத்துச் செல்வதாகவும், கூரியர் சர்வீஸ் மூலம் பார்சலிலும், வெளியூர் செல்லும் பேருந்துகளில் பார்சல் மூலமும் பணம் எடுத்துச் செல்லப்படுவதாக அதிர்ச்சித் தகவல்வெளியாகியுள்ளது. ரகசியமாக வாக்காளர்களின் வங்கிக் கணக்குகளில் பணம் போடப்படும் என்ற உத்தரவாதத்தையும் சில கட்சியினர் பொதுமக்களிடம் தெரிவித்து வாக்களிக்க வற்புறுத்தி வருகின்றனர்.
ஆர்.கே. நகரில் பகிரங்கமாக பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக ஆதாரங்கள் வெளிச்சத்திற்கு வந்தும்கூட தேர்தல் ஆணையத்தால் எந்தவித நடவடிக்கையையும் எடுக்க முடியவில்லை. தேர்தல் நடக்கும் இரண்டு நாட்களுக்கு முன்புபணப்பட்டுவாடா செய்ய அதிமுக முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் நேரங்களில் வணிகத் தொடர்புடைய செயல்களுக்காக சிறுவணிகர்கள் கொண்டு செல்கின்ற தொகைகளை பறிமுதல் செய்யப்படுவதை தவிர்க்க வேண்டும் எனவும், தேர்தல் ஆணையரகம் அறிவித்துள்ள பணப்பரிமாற்றம் செய்ய உச்சவரம்புத்தொகை 50 ஆயிரம் ரூபாய் என்பதை குறைந்தபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை சில்லரை மற்றும் சிறு - குறு வியாபாரிகள், எடுத்துச்செல்ல அனுமதிக்க வேண்டும்என்ற கோரிக்கையை வணிகர் சங்கங்கள்தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளன.ஆனாலும் தேர்தலையொட்டி நடைபெறும் சோதனையில் இதுவரை ஏடிஎம் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணம், நகைக்கடைகளுக்கு கொண்டு செல்லும் நகைகள் மற்றும் வியாபாரிகள் எடுத்துச் செல்லும் பணம் போன்றவைதான் சிக்கியுள்ளன. ஆளும் கட்சியினரும் ஆளும் கட்சியில் முன்பு செல்வாக்கோடு திகழ்ந்த கும்பலும் சிக்கவில்லை. எதுஎப்படியோ தேர்தலையொட்டி நடைபெறும் சோதனையில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் சாதாரண மக்களும், வணிகர்களும்தான்.