tamilnadu

ஊடகங்களின் கணிப்பு பொய்யாகும்: புதுவை முதல்வர்

புதுச்சேரி, மே 20-முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தின ஜோதி யாத்திரை குழுவினரை வழியனுப்பும் நிகழ்ச்சி புதுவை கடற்கரை காந்தி சிலை எதிரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:-நாட்டில் உள்ள 80 கோடி வாக்காளர்களில் 5 லட்சம் பேரை வைத்து ஒரு தேர்தலின் முடிவை கணித்துவிட முடியாது. நம் நாட்டில் 90 சதவீதம் கருத்து கணிப்புகள் பொய்த்து போய் உள்ளன. 2004-ல் வாஜ்பாய் மீண்டும் பிரதமராக வருவார் என்று கூறினார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. 2009-ல் மன்மோகன் சிங் மீண்டும் பிரதமராக வரமாட்டார் என்றார்கள். அதுவும் பொய்த்து போய்விட்டது.தமிழகத்தை பொறுத்த வரை திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு குறைந்தது 34 இடங்களில் வெற்றி பெறும் என்பது அனைவரது கணிப்பு. நான் தமிழகத்தில் பல இடங்களில் சென்றபோது மக்கள் மத்தியில் எழுச்சி, மோடி எதிர்ப்பு அலை இருந்ததை பார்க்க முடிந்தது. ஆனால், கருத்துக் கணிப்பில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 27 இடங்களில் தான் வெற்றி பெறும் என கூறியிருக்கிறார்கள்.கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனால் ராஜஸ்தானில் 3 இடங்களிலும், மத்திய பிரதேசத்தில் 5 இடங்களில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்கிறார்கள். குஜராத்தில் முழுமையாக பாஜக வெல்லும் என்கிறார்கள். ஆனால் குஜராத்தில் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 85 இடங்களில் வெற்றி பெற்றது.அதுமட்டுமல்லாமல் மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு 14, 15 இடங்கள் கிடைக்கும் என்கிறார். இதேபோல் பல மாநிலங்களில் நம்ப முடியாத அளவில் கருத்துக் கணிப்பு உள்ளது. இந்த கருத்துக் கணிப்பை வைத்து எந்த முடிவையும் சொல்ல முடியாது. வாக்கு எண்ணிக் கைக்கு பிறகு வருகிற முடிவைதான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.கோயிலுக்கு போவதற்கு யாருக்கும் தடை கிடையாது. ஆனால் தேர்தல் விதிமுறை அமலில் இருக்கும்போது பிரதமர் மோடி கோயிலுக்கு செல்வது சுய விளம்பரம் தேடுவது போல் உள்ளது. அவருக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. இவ்வாறு முதல்வர் கூறினார்.