மாயூரம் வேதநாயகம் பிள்ளை 1826ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் நாள் பிறந்தார்.இவர் தமது சிறு வயதிலேயே திருமணங்கள், விருந்தினர் வருகை போன்ற நிகழ்வுகளின் போதுநகைச்சுவையான கவிதைகளை எழுதினார். இவர் நீதிமன்றங்களில் பதிவாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றிய பின் 1856இல் தரங்கம்பாடியில் முனிசீஃப் வேலையில் அமர்ந்தார். மாயவரம் மாவட்ட முனிசீப்பாக 13 ஆண்டுகள் பணி புரிந்தமையால் இவரை மாயவரம் வேதநாயகம் பிள்ளை என்றே அழைக்கலாயினர். மாயவரத்தின் நகர் மன்ற தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
அந்தக் காலகட்டத்தில் 16 புத்தகங்கள் எழுதினார். தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தையும் அப்போதே எழுதினார். வீணை இசைப்பதிலும் வல்லமை பெற்றிருந்தார்.அவரது சமகாலத்தோழரான தமிழறிஞர்கள் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, இராமலிங்க வள்ளலார், திருவாவடுதுறை ஆதீனம் சுப்பிரமணிய தேசிகர், கோபாலகிருஷ்ண பாரதியார் ஆகியோருடன் நட்பு பாராட்டி நெருங்கியிருந்தார்.கி.பி 1805 முதல் கி.பி. 1861 ஆம் ஆண்டு வரை ஆங்கில மொழியில் இருந்த சதர்ன் கோர்ட் தீர்ப்புகளை தமிழில் மொழி பெயர்த்துசித்தாந்த சங்கிரகம் என்ற நூலாக 1862ல் வெளியிட்டார் மேலும் 1862, 1863 ஆம் ஆண்டுகளின் தீர்ப்புகளையும் அவ்வாறே வெளியிட்டார். தீர்ப்புகளை முதன் முதலில் மொழி பெயர்த்த தமிழறிஞர் வேதநாயகம் பிள்ளை ஆவார்.இவர் 1889ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் நாள் காலமானார்.
பெரணமல்லூர் சேகரன்