சென்னை:
நீட் நுழைவு தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு முற்றாக விலக்கு பெறும் வகையில் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் உயர்மட்டக்குழு முன்னெடுக்க வேண்டும் என்று ஏ.கே. ராஜன் குழுவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து ஆராய தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி டாக்டர் ஏ.கே.ராஜன்தலைமையிலான உயர்மட்டக்குழு விற்கு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அனுப்பியுள்ள கடிதம் வருமாறு:
தமிழகத்தில் நீட் தேர்வு உருவாக்கியுள்ள தாக்கம் குறித்தும், நீண்ட போராட்டங்களால் தமிழகத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள சமூக நீதிக் கோட்பாட்டிற்கு நீட் தேர்வு முறையால் உருவாகியுள்ள ஆபத்தான அம்சங்கள் குறித்தும், முக்கியமான அம்சங்களை இத்துடன் இணைத்து அனுப்பியுள்ளோம். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு முற்றாக விலக்கு பெறுவதற்கான தலையீட்டையும், உரிய முடிவையும் தங்கள் தலைமையிலான குழு மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
1. தமிழ்நாட்டில் நடைமுறை யில் உள்ள இளநிலை மற்றும் முதுநிலை அளவிலான மருத்துவக் கல்வி என்பது தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்த நீட் தேர்வினால் முழுமையாக பாதிக்கப்படுகிறது என்பதோடு, தமிழ்நாட்டில் வலுவாக உள்ள பொது சுகாதார முறையையும் கூட பாதிக்கிறது. இன்றையநிலையில் மருத்துவக் கல்வியையும் மக்களுக்கான மருத்துவ சேவையையும் தனித்துப் பிரித்துப் பார்க்க முடியாது என்ற நிலையில் அனைவருக்குமான சுகாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் நிலையையும் நீட் தேர்வு முறை உருவாக்குகிறது என கருதுகிறோம்.
2. நீண்ட காலமாக தமிழ்நாடுஅரசு பின்பற்றிய மாணவர் சேர்க்கை முறை என்பது, தற்போது கொண்டு வரப்பட்டுள்ள நீட் தேர்வினால் பாதிக்கப்படுகிறது என்பதோடு, திறமையான, தகுதி வாய்ந்த மாணவர்களுக்கும், சமூகத்தில் மிகவும் பின் தங்கியுள்ள பகுதிகளிலிருந்து வரும் மாணவர்களுக்கும் மருத்துவ படிப்புகளை எட்டாதஒன்றாக மாற்றிவிடும் நிலைமையை யும் உருவாக்குகிறது. மேலும், வசதிபடைத்தவர்களுக்கும், பயிற்சி மையங்களில் ஏராளமாக செலவு செய்து படிப்பவர்களுக்கு மட்டுமே
இனி மருத்துவ படிப்பு என்பதையும் கூட நீட் தேர்வு முறை உருவாக்குகிறது.
3. நீட் தேர்வினால் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள வலுவான பொது சுகாதார கட்டமைப்பிற்கு பெரும் ஆபத்து உருவாவதோடு, பெருகி வரும் கார்ப்பரேட் மருத்துவமனைகளோடு பொதுசுகாதாரத்தை இணைக்கிற ஒரு சங்கிலியாகவும் இது மாறுகிறது.. மருத்துவம் மற்றும்பொது சுகாதாரத் துறையில் நீண்ட அனுபவம் பெற்றவர்களை முற்றாக புறக்கணித்து விட்டு, வணிக நோக்கம் கொண்டவர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ள தேர்வு முறை இதுவென்பதால் இத்தகைய ஐயம் இயல்பாக அனைத்துதரப்பினரிடமும் எழுகிறது. மேலும் மருத்துவக் கல்வி குறித்து நிபுணர் குழுவும், நாடாளுமன்ற நிலைக்குழுவும் அளித்த பல்வேறு பரிந்துரைகளும் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்பதிலிருந்து இத்தேர்வு முறையின் மீதான சந்தேகமும் வலுக்கிறது.
4. நீட் தேர்வு குறித்த விஷயத்தில்நாடாளுமன்ற நிலைக்குழுவும், உச்சநீதிமன்றமும், நிபுணர் குழுவும்ஒத்த கருத்தை ஏற்கனவே தெரிவித்திருந்தன. அதாவது, நாடு முழுவதற்குமான ஒரு பொது நுழைவு தேர்வு முறைக்கு வெளியே நிற்க விரும்பும் மாநிலங்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமெனவும், பிறகு ஏதேனும் ஒருசந்தர்ப்பத்தில் அத்தகைய மாநிலங்களில் பொது நுழைவு தேர்வில் இணைந்து கொள்ள விரும்பினால் அதற்கான வாய்ப்பை மீண்டும் அம்மாநிலங்களுக்கு அளிக்கலாமெனவும் பரிந்துரை களை அளித்திருந்தன. ஆனால் இத்தகைய பரிந்துரைகளை எதையுமே கணக்கில் கொள்ளாத மத்திய அரசு நீட் தேர்வை அனைத்துமாநிலங்களுக்கும் கட்டாயமாக்கி யிருப்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
5. ஏற்கனவே கடந்த காலத்தில் தமிழ்நாட்டில் அமலில் இருந்த மாநில அளவிலான பொது நுழைவு தேர்வு முறை என்பது ரத்து செய்யப்பட்டு, பள்ளி இறுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே உயர் கல்விக்கான சேர்க்கை நடைபெறும் முறை அமலாக்கப்பட்டது. இப்பிரச்சனை உச்சநீதிமன்றத்திற்கு சென்ற போது, நீதிமன்றமும், பொது நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கும், பள்ளி இறுதிதேர்வு அடிப்படையில் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை நடைபெறும் நடைமுறைக்கும் ஒப்புதல்அளித்துள்ளது. எனவே, இத்தகையநடைமுறையின் தொடர்ச்சியாக நீட்தகுதி தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு முற்றாக விலக்கு அளிக்கப்பட வேண்டும்.
6. மருத்துவ கல்வியோ, மருத்துவ சேவையென்பதோ ஒரு லாபநோக்கத்துடன் இருக்க முடியாதெனவும், அது ஒரு சேவை என்பதாகவே அனைத்து மட்டத்திலும் இறுதி செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றமும், நாடாளுமன்ற நிலைக்குழுவும் அளித்த பரிந்துரைகளை நிராகரித்து, மருத்துவத்தை ஒரு வணிக கண்ணோட்டத்தோடு மட்டுமே அணுகி பல பரிந்துரைகளை அளித்திருக்கிற நிதி ஆயோக் அமைப்பின் ஆலோசனைகளை மட்டுமே அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. இதுவும் ஒரு ஆபத்தான அணுகுமுறையே ஆகும். மேலும் தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் நியமிக்கப்பட்ட அதிகார அமைப்பின் மூலம் இளநிலை மருத்துவக் கல்வியில் சேருவதற்கு ஒரே மாதிரியான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) `ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் பரிந்துரைக்கப்பட்டவாறு இருக்க வேண்டும். நியமிக்கப்பட்ட அதிகாரஅமைப்பு மேற்கூறிய முறையில் ஒரே வகையில் நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதை உறுதி செய்யும் போன்ற பல்வேறு பாதகமான பரிந்துரைகளை நிதி ஆயோக் அமைப்பு அளித்திருக்கிறது என்பதிலிருந்து இதன் ஆபத்துகளை உணர முடிகிறது.
7. மேலும் மருத்துவ சேவைக்கான அடிப்படைகள் அனைத்துமே மருத்துவ கல்வியிலிருந்து தான் துவங்குகிறது. ஆனால் மாநில அரசின் வரம்பிற்குள் உள்ள மருத்துவ சேவையின் தேவையை நிறைவேற்றும் வகையிலான மருத்துவ கல்வியானது பொது பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறது. மருத்துவ கல்வி பொது பட்டியலில் இருப்பதாலேயே மாநிலங்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை கணக்கிலெடுக்காமல் ஒன்றியஅரசு மருத்துவ கல்வி விஷயத்தில் தானாக ஒரு சில முடிவுகளை எடுப்பது என்பது பொருத்தமற்றதாகும். ஒரு வேளை பொதுபட்டியலில் உள்ளதால் ஒன்றிய அரசே ஒரு சில முடிவுகளை எடுக்கலாம் என்றாலும் கூட, ஜல்லிகட்டுபோன்ற பிரச்சனையில் தமிழகத்தின் உணர்வை கணக்கிலெடுத்து விதிவிலக்கு அளிக்கப்பட்ட தைப் போல மருத்துவ பொது நுழைவு தேர்வு பிரச்சனையிலும் தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு அளிக்க முடியும். எனவே இந்த அடிப்படையிலும் நீட் விலக்கிற் கான கோரிக்கை வலுவாக வலியுறுத்தப்பட வேண்டும்.
8. தமிழ்நாடு மாநிலம் என்பது நெடியதொரு சமூக நீதிக்கான போராட்டக் களத்தின் மூலமாகவே உயர்கல்வி, தொழில்நுட்ப கல்வி மற்றும் மருத்துவ கல்வி ஆகிய வற்றில் முன்னேறிய மாநிலமாகும். தற்போதைய நீட் நுழைவு
தேர்வால், நீண்ட போராட்டங்களால் பாதுகாக்கப்பட்ட சமூக நீதி என்பது கேள்விக்குள்ளாகும் என்பதோடு, சமூகத்தில் மிக எளிய மற்றும் பின் தங்கிய பகுதியினருக்கு மருத்துவ கல்வி போன்ற உயர் கல்விக்கான வாய்ப்புகள் முற்றாக மறுக்கப்படும் நிலையும் உருவாகும் என்பதால், இத்தகைய நீட்நுழைவு தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு முழுவிலக்கும் என்பதும் அவசியமானதாகிறது.
9. நமது அரசியல் சாசனம் என்பது அனைவருக்குமான சமவாய்ப்பை மற்றெல்லாதுறைகளிலும் உறுதி செய்துள்ளதைப் போலவே கல்வியிலும் உறுதி செய்துள்ளது.ஆனால் தற்போதைய நீட் நுழைவு தேர்வால் அனைவருக்குமான மருத்துவ கல்வி வாய்ப்பென்பது மறுக்கப்படுவதோடு, வணிக நோக்கத்தோடு புற்றீசல் போல முளைத்திருக்கும் பயிற்சி மையங்களில் சேர்ந்து, பெரும் பொருட்செலவில் தங்கள்தகுதியை உயர்த்திக் கொள்ளும் வாய்ப்புள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியினருக்கே வாய்ப்பாக அமைகிறது என்பதால் இதை கடுமையாக எதிர்க்க வேண்டியிருக்கிறது.
10. பொதுவாகவே பொருளாதார ரீதியிலும், சமூக ரீதியிலும் பலவீனமான பிரிவினரின் கல்வி மற்றும் பொருளாதார நலன்களை சிறப்பு கவனத்துடனேயே அரசு அணுகவும், ஊக்குவிக்கவும் வேண்டும்; இத்தகையபிரிவினருக்கு இழைக்கப்படும் சமூக அநீதியிலிருந்து அரசு தான் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதை அடிப்படையாககொண்டே, அரசின் வழி நடத்தும் கொள்கையாக 46 வது சட்டப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பின் தங்கிய குடிமக்களின் கல்வி, பொருளாதாரம், சமூக முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்படும் எந்தவொருசிறப்பு ஏற்பாடும் அவர்களுக்கு பாரபட்சமாக அமைந்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் தான், சட்டப்பிரிவு 15(3) இல் பின் தங்கியவர்களுக்கான வாய்ப்புகள் விரிவாக்கப்பட வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போதுகொண்டு வரப்பட்டுள்ள நீட் நுழைவு தேர்வானது மேற்கண்ட அம்சங்களுக்கு முற்றிலும் முரணாக உள்ளதோடு, சமூகத்தில் பின் தங்கியுள்ள பகுதியினருக்கு பெரும்பின்னடைவை உருவாக்கும் வகையிலுமே உள்ளது. எனவே, மேற்குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களிலிருந்தும், இதர பல அம்சங்களையும் கணக்கிலெடுத்து பார்க்கும் போது தமிழக மாணவர் நலனுக்கு எதிராகவும், தமிழ்நாட்டின் பொது சுகாதார கட்டமைப்பில் பெரும் பலவீனத்தையும் இந்த நீட் தேர்வுமுறை உருவாக்குகிறது என்பது தெளிவாகிறது. எனவே நீட் நுழைவு தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு முற்றாக விலக்கு பெறும்வகையில் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் தங்கள் தலைமையிலான குழு முன்னெக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சிகள் அனைத்தும் ஒரே தொகுப்பில் உள்ளது...