கடந்த ஆறு நாட்களாக நடைபெற்று வந்த எல்பிஜி டேங்கர் லாரி வேலை நிறுத்த போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு 2025-30-ஆம் ஆண்டுக்கான டேங்கர் லாரிகள் ஒப்பந்தம் சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதில் 3,500 டேங்கர் லாரிகளுக்கு வேலைக்கான அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 2,800 டேங்கர் லாரிகளுக்கு மட்டுமே வேலைக்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டது. மீதமுள்ள லாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே மீதமுள்ள 700 டேங்கர் லாரிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்கக் கோரி தென்மண்டல டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், கடந்த 9-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தது. கடந்த, 6 நாட்களாக .வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தை எதிர்த்து எண்ணெய் நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இவ்வழக்கின் விசாரணியில், எல்பிஜி கேஸ் டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்தம் தற்காலிகமாக 2026-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்தது. இதை அடுத்து, டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் போராட்டத்தை திரும்பப் பெற்றது.