tamilnadu

img

இலக்கிய மாமணி விருது, கனவு இல்லம், கலைஞர் நூலகம்.... தமிழக அரசின் அறிவிப்புக்கு தமுஎகச வரவேற்பு.....

சென்னை:
எழுத்தாளர்களுக்கு இலக்கிய மாமணி விருது,கனவு இல்லம் மற்றும் மதுரையில்  கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ( பொறுப்பு) மதுக்கூர் ராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 

தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், “இலக்கிய மாமணி” என்ற விருதினை உருவாக்கி, தமிழின் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் வழங்குவது என்கிற தமிழ்நாடு அரசின் முடிவை தமுஎகச பாராட்டி வரவேற்கிறது. 

பாராட்டுப்பத்திரமும் ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் கொண்ட இவ்விருது ஒன்றிய, மாநில அரசுகளால் இலக்கியத்திற்கென வழங்கப்படுவதிலேயே அதிக தொகையைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகள் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் வசிக்கின்ற அல்லது விரும்புகிற மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு கட்டித் தரப்படும் என்கிற கனவு இல்லம் திட்டமும் பாராட்டுக்குரியது. 

எழுத்தாளர்களின் ஆக்கச் செயல்பாடுகளுக்கான சமூக அங்கீகாரத்தையும் மதிப்பையும் அவர்களது நூல்களைப் படிப்பதற்கான கவனக்குவிப்பையும் இவ்விரு அறிவிப்புகளும் உருவாக்குமெனக் கருதுகிறது தமுஎகச. இதேபோல 70 கோடி ரூபாயில் மதுரையில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்படும் கலைஞர் நூலகம், அறிவுத்தேடல் கொண்டோரின் பேரார்வங்களை நிறைவுசெய்வதாய் அமைந்திட தமுஎகச தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.