tamilnadu

img

அமெரிக்க வரி விதிப்பை கண்டித்து இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

இந்தியா மீதான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடாவடித்தனமான வரி விதிப்பை கண்டித்து இன்று (செப்.5) சென்னையில் இடதுசாரி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாட்டின்  எரிபொருள் தேவைக்காக ரஷ்யாவில் இருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் வாங்கி வருவதை இந்தியா உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் என டிரம்ப் அரசு தொடர்ந்து  மிரட்டி நிர்பந்தித்து வந்தது. அமெரிக்காவின் நவீன காலனி ஆதிக்கக் கொள்கைக்கு இந்தியா துணை போகக் கூடாது என இடதுசாரி, ஜனநாயக சக்திகள் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றன. இந்திய அரசின் மென்மையான அணுகுமுறை காரணமாக,  இப்போது   அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கான வரியும், அபராதமும் சேர்த்து 50 சதவீதமாக உயர்த்தி ஆகஸ்டு 27, 2025 முதல் வசூலிக்க அமெரிக்க அரசு  உத்தரவிட்டது.  அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பால் நமது நாட்டின் ஜவுளி, பின்னலாடை, ஆயத்த ஆடைகள், ஆபரணங்கள், இறால், தோல்  மற்றும் தோல் பொருட்கள், மின்சார எந்திர சாதனங்கள் என பல பிரிவுகளில்  உற்பத்தித்  தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்க அரசின் அடாவடி வரிவிதிப்புக் கொள்கையை கண்டித்தும்  இடதுசாரி கட்சிகள் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்), இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் ) விடுதலை – கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.