tamilnadu

ஆளுநர் உரைக்கு தலைவர்கள் பாராட்டு...

சென்னை:
திமுக அரசின் முதல் கூட்டத் தொடரில் தமிழக ஆளுநர் ஆற்றிய உரைக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் பாராட்டும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.

சமத்துவக் கொள்கை: கி.வீரமணி
தமிழ்நாட்டின் அத்துணைப் பிரச்சனைகளையும் தீர்த்து வைக்க உறுதி பூண்டு, ஆட்சியை மக்களாட்சியாக,  ஒரு கட்சி ஆட்சியாக இல்லாமல் - அனைவருக்கும் அனைத்தும் கிடைத்திடும் சமூகநீதிக் கொடி பறக்கும் ஆட்சியாக அமைவதோடு,“தந்தை பெரியார் காண விரும்பிய சுயமரியாதைச் சமூகமாகவும், உரிமை பெற்ற மக்களாகவும், எல்லா வளமும் கொண்ட மாநிலமாகவும், தமிழ்நாட்டை மாற்றுவதற்கு இந்த அரசு உறுதியேற்றுள்ளது.”ஆளுநர் உரையில்,“ சரியானவரால், சரியான பாதையில், சரியான நேரத்தில் சரியற்றவைகளை சரி செய்ய ஆயத்தமாகி, சரி சமத்துவக் கொள்கையுள்ள மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடரும் இந்தக் ‘கலைஞர் அரசினை’ வாழ்த்தும் கோடானு கோடி மக்களோடு நாமும் இணைகிறோம்; வாழ்த்தி மகிழ்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

நல்லாட்சிக்கு வழி காணுகிறது: வைகோ
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில், “அனைத்துத் தரப்பு மக்களுக்கான அரசாக இந்த அரசு திகழும்; திராவிட இயக்கத்தின் அடிப்படை லட்சியங்களான சமூகநீதி, சமத்துவம். பெண் உரிமை, மாநில சுயாட்சி ஆகியவற்றை நிலைநிறுத்துவதில் திமுக அரசு உறுதியாக இருக்கின்றது” என்று கூறியுள்ளார்.

விடியலின் வெளிச்சக்கீற்று: இரா. முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன்,“கடுமையாக கடன்சுமையிலும், நிதி நெருக்கடியிலும் தமிழ்நாடு தத்தளிக்க என்ன காரணம் என்பதை மக்களுக்கு விளக்கிடும் வகையில், ஜூலை மாதம் வெள்ளை அறிக்கை வெளியிடுவது வரவேற்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.தமிழ்நாடும், தமிழ் நாட்டில் வாழ்வோரும் தலை நிமிர்ந்து, சுய மரியாதையுடன் வாழ்ந்திட சமூக நீதி, பாலின சமத்துவம், அனைவருக்குமான பொருளாதார நீதி வழங்க அரசு உறுதி பூண்டிருப்பது பாராட்டுக்குரியது எனவும் கூறியுள்ளார்.