சென்னை:
மஹா புயலால் குமரி மாவட்டத்தில் பலத்த சூறைக் காற்று வீசும் என்றும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று தெரிவித்திருக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர்ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “மஹா புயலால், குமரிமுனை, மாலத்தீவு ஆகிய கடற் பகுதிகளில் அடுத்த ஆறு மணி நேரத்திற்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், எனவே, மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்” என்றார்.குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று கரை திரும்பாத 8 படகுகளில் உள்ள மீனவர்களுக்கு மத்திய உள்துறையின் மூலம் தகவல்தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மழை பெய்தவுடன், அரசு உத்தரவுக்கு காத்திராமல், உடனடியாக முடிவெடுத்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.