தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில், வங்கக் கடலில் உருவாகியுள்ள “புல் புல்” புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்து, கடலுக்குள் செல்ல அனுமதி டோக்கன் வழங்கவில்லை. இதன் காரணமாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. படகுகள் அனைத்தும் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் கொள்ளுக்காடு தொடங்கி செம்பியன்மாதேவிப்பட்டினம் வரை உள்ள 34 மீனவ கிராமங்களில் சுமார் 4,500 நாட்டுப்படகுகளும் மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இருந்த இடத்தில் கஜா புயலுக்கு பின் தற்போது 134 விசைப்படகுகளும் உள்ளன.
திங்கள், புதன், வெள்ளி ஆகிய தினங்களில் விசைப்படகுகளும் மற்ற தினங்களில் நாட்டுப் படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது வழக்கம். இந்நிலையில் வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவாகியுள்ள “புல் புல்” புயல் காரணமாக ஒட்டு மொத்த தமிழக மீனவர்களும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து மீன்வளத்துறையினர் அனுமதி டோக்கன் வழங்கவில்லை. இதனால் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 134 விசைப்படகுகளும் கடலுக்குச் செல்லவில்லை. படகுகள் அனைத்தும் துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இதுபற்றி மீனவர்கள் கூறும்போது, “கடந்தாண்டு வீசிய கஜா புயலுக்கு பின் மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. இதுவரை மீன்பிடி தொழில் நட்டத்தில் தான் இயங்கி வந்தது. அதே சமயம் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் தற்போது தான் மீன்பிடி சீசன் தொடங்கியுள்ளது. தஞ்சை மாவட்டத்தை பொறுத்த வரை தற்போது வரை புயல் உருவானதால் எவ்வித பாதிப்பும் ஏற்படும் என்பது போல் தெரியவில்லை. மாவட்டம் வாரியாக புயல் எச்சரிக்கை விடுப்பதை தவிர்த்து வானிலை மையம் ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் எச்சரிக்கை விடுத்திருப்பது வருத்தமளிக்கிறது” என விரக்தியுடன் கூறினர்.