சென்னை:
கேரள மாநிலத்தின் மிகப் புகழ்பெற்ற விருதுகளில் ஒன்றான ஓஎன்வி விருதுகவிப்பேரரசு வைரமுத்துவுக்கு அறிவிக்கப் பட்டுள்ளது.
கவிஞர் வைரமுத்துவுக்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:தமிழ்நாட்டின் பெருமைக்குரிய இலக்கியவாதியான ‘கவிப்பேரரசு’ வைரமுத்துவின் புகழ்மகுடத்தில் மேலும் ஒரு வைரம் மின்னுவது போல அவருக்கு கேரளாவின் மிகப் புகழ்பெற்றவிருதான ஓ.என்.வி. விருது அறிவிக்கப் பட்டிருப்பதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மலையாளக் கவிஞரும் பாடலாசிரியரும் ஞானபீட விருது பெற்றவருமான ஓ.என்.வி.குரூப் அவர்களின் பெயரால் கேரளப் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் குழு விருதாளரைத் தேர்வு செய்து இந்த விருதினை வழங்கி வருகிறது.
ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய அளவிலான இந்த உயரிய விருதைப் பெறும் மலையாள மொழியல்லாத முதல் கவிஞர் என்ற பெருமையை நம்முடைய கவிப்பேரரசு அவர்கள் பெற்று, அன்னைத் தமிழுக்கும் சிறப்பு சேர்த்திருக்கிறார்.முத்தமிழறிஞர் கலைஞரை தனது தமிழ் ஆசான் என எல்லா நிலைகளிலும் உரக்கச் சொல்லி, கவிதை - திரைப்பாடல்- தனிப்பாடல் - புதினம் - சிறுகதை எனத் தமிழ் இலக்கியப் பரப்பின் அனைத்துத் துறைகளிலும் தனது தனித்துவமிக்க படைப்புகளால் முத்திரை பதித்தவர் கவிப்பேரரசு வைரமுத்து.சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை 7 முறை பெற்றவர். இலக்கியப் படைப்புக்கான சாகித்ய அகாடமி விருதினைப் பெற்றவர்.இந்திய ஒன்றிய அரசின் பத்மபூஷண் விருது பெற்றவர். கவிப்பேரரசின் படைப்பாற்றலுக்காகத் தற்போது கிடைத்திருக்கும் கேரளாவின் ஓ.என்.வி. விருதின் வாயிலாகஅவரது தமிழாற்றல் தனது எல்லைகளை மேலும் விரிவுபடுத்தி, உலகளாவிய விருதுகளை நோக்கிய அவரது பயணத்திற்கானப் பாதையை வகுத்துள்ளது. தமிழுக்குப் பெருமை சேர்த்திடும் கவிப்பேரரசின் இலக்கியப் பயணம் சிறந்திட வாழ்த்துகள்.இவ்வாறு வாழ்த்தியுள்ளார்.