சென்னை:
உடுமலைபேட்டை சங்கர் கொலை வழக்கில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுவித்த சென்னை உயர்நீதிமன்றம் மற்றவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை குறைத்து தீர்ப்பளித்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த கவுசல்யா மாற்று சாதியைச் சேர்ந்த சங்கர் என்பவரை கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் தேதி கவுசல்யா வையும், அவரது கணவர் சங்கரையும், உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல் வெட்டி சாய்த்தது. அதில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலத்த காயங்களுடன் கவுசல்யா உயிர் தப்பினார்.சிசிடிவி காட்சிகளில் பதிவான படுகொலை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்த வழக்கில் கவுசல்யாவின் தந்தை உள்ளிட்ட 6 பேருக்கு 2017 ஆம் ஆண்டு டிசம்ப
ரில் திருப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்ட 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது. தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை, உறவினர் பிரசன்னகுமார் ஆகிய 3 பேரை விடுதலை செய்தும் தீர்ப்பளித்திருந்தது. அத்துடன் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும், மற்றொருவருக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் திங்களன்று (ஜூன் 22) வழங்கிய தீர்ப்பில், கவுசல்யாவின் தந்தையை விடுதலை செய்து உத்தரவிட்டது. மற்ற 5 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்துள்ளது.கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்பட 3 பேரின் விடுதலையையும் சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. காவல் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது.
சட்டப் போராட்டத்தை தொடர்வேன்: கவுசல்யா
இந்த வழக்கின் தீர்ப்பை கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி வரவேற்றுள்ள நிலையில், அவரது மகள் கவுசல்யா, “நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு அதிருப்தி அளிக்கிறது. தந்தையின் விடுவிப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன். சட்டப் போராட்டத்தை தொடர்வேன்” என கூறியுள்ளார்.
அரசு தரப்பில் மேல்முறையீடு
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக அரசு வழக்கறிஞரும் தெரிவித்துள்ளார்.வழக்கு வலுவாக இருந்ததால் தான் கீழ் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது என்றும், இப்போது கவுசல்யாவின் தந்தை விடுதலை மற்றும் 5 பேரின் தண்டனைக் குறைப்பை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய உள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
திருப்பூரில் இன்று ஆர்ப்பாட்டம்
உடுமலைப்பேட்டையில் பட்டப்பகலில் கூலிப்படையினர் சரமாரியாக வெட்டியதில் சங்கர் பலியானார். சாதி ஆணவப் படுகொலையில் குறுகிய காலத்தில் திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இந்த வழக்கின் மேல்முறையீட்டில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பட்டியல் சாதியினர் மீதான வன்கொடுமைத் தாக்குதலுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இருப்பது பேரதிர்ச்சியும் கவலையும் அளிக்கிறது என தீண்டாமை ஒழிப்பு முன்னணி கூறியுள்ளது.இந்த வழக்கில்,உரிய வலுவான, சான்றுகளுடன் தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி ஜூன் 23 செவ்வாயன்று காலை 10.30 மணிக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிய, தலித்திய, பெரியாரிய அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருப்பூர் மாவட்டக்குழு முடிவு செய்துள்ளது.
கூலிப்படை கலாச்சாரத்தை ஊக்குவிக்கும்: திருமாவளவன்
நீதிமன்றத் தீர்ப்பு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறுகையில், “உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் முதன்மைக் குற்றவாளிகள் விடுதலை என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது. ஆணவக்கொலைகளைத் தடுப்பதற்கென தனிச்சட்டம் இல்லாமையும், அரசுத் தரப்பு வாதம் வலுவாக இல்லை என்பதுவுமே இதுபோன்ற தீர்ப்பு வருவதற்கு காரணங்களாகும்.இதுபோன்ற தீர்ப்பு ஆணவக்கொலைகளையும், கூலிப்படை கலாச்சாரத்தையும் ஊக்குவிக்கும். ஆணவக்கொலைகளைத் தடுக்கத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும்” எனக் கூறியுள்ளார்.