tamilnadu

img

ஜூன் 12 மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படாது அமைச்சர் தகவல்

சென்னை, ஜுன் 6-குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படாது என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் வியாழக்கிழமையன்று செய்தி யாளர்களிடம் தெரிவித்தார். ஆண்டுதோறும் ஜூன் 12 அன்று குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.  டெல்டா மாவட்டத்தின் கடைகோடி பகுதிகளாக உள்ள சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், செம்மங்குடி உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த காலங்களில் 8 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்புக்கு மேல் குறுவை சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தற்போது, இப்பகுதிகளில் குறைந்தளவிலேயே குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால், நடப்பாண்டிலாவது குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்படுமா என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர். இந்த நிலையில் வியாழக்கிழமையன்று திருவாரூரில் அமைச்சர் காமராஜ் செய்தி யாளர்களிடம் கூறுகையில், குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாது.மேட்டூர் அணையில் தண்ணீர் குறைவாக இருப்பதால் ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படாது. ஆழ்துளை கிணறுகள் வைத்துள்ளவர்கள் குறுவை சாகுபடியில் ஈடுபட லாம். தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கையை எடுக்கும் என்று தெரிவித்தார்.