சென்னை:
ஒன்றிய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் தலித்துகளும்பழங்குடி மக்களும் விவசாயிகளும் தொழிலாளர்களும் நடத்தி வருகிற கிளர்ச்சிகள் சமத்துவ லட்சியப் போராட்டங்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கின்றன என்று கேரள தேவசம் போர்டு அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார். சமூகநீதியை நிலைநாட்டுவ தற்காக இடதுசாரி – பெரியாரிய – அம்பேத்கரிய இயக்கங்கள்மேலும் மேலும் இணைந்து செயல்பட வேண்டிய வரலாற்றுத் தேவை இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாட்டின் இந்து அறநிலையத்துறை போன்றது கேரளத்தின் தேவசம் போர்டு. வரலாற்றில் முதல் முறையாக, பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சியில், இத்துறையின் அமைச்சராக தலித் சமூகத்தைச் சேர்ந்தவரான ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் இதற்காக வெள்ளியன்று (ஜூன் 11) இணைய வழியில் நடைபெற்ற பாராட்டு நிகழ்வில் ஏற்புரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார்.
முன்னணியின் மாநிலத் தலைவர் த. செல்லக்கண்ணு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், திராவிடர் கழகம் பரப்புரைச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி ஆகியோர் பாராட்டுரை வழங்கினர். முன்னணியின் சிறப்புத் தலைவர் பி. சம்பத், பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பொருளாளர் இ. மோகனா வரவேற்றார்.தமிழ்நாட்டில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் இயக்கங்களில் பங்கேற்ற அனுபவங்களை நினைவுகூர்ந்த ராதாகிருஷ்ணன், பெரியார், அம்பேத்கர் சிந்தனைகளில் வளமான, பயனுள்ள வழிகாட்டல்கள் உள்ளன என்றார். “கேரளத்தில் சமூகநீதியையும் சமத்துவத்தையும் நிறுவுவது சாத்தியமா என்று கூட முற்போக்காளர்களிடையே விவாதங்கள் நடந்ததுண்டு. அது சாத்தியமே என்ற நம்பிக்கை இப்போது வலுப்பட்டிருக்கிறது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
கேரளத்தின் சமூக சீர்திருத்த இயக்க முன்னோடிகளான நாராயண குரு, அய்யன்காளி, வைகுண்டசாமி உள்ளிட்டோரின் பங்களிப்பால் உருவான முற்போக்குப் பாதையில்தான் இஎம்எஸ், ஏகேஜி, கிருஷ்ணப்பிள்ளை போன்ற கம்யூனிஸ்ட்டுகள் அடுத்தகட்ட இலக்குகளை நோக்கி நடைபோட்டார்கள். கேரள மக்களும் அதற்கு ஒத்துழைத்தார்கள்.மிக மோசமான சாதியக்கொடுமைகளும், நிலப்பிரபுத்துவ அநீதிகளும்தான் முன்பு கேரள சமூகத்தில்மலிந்திருந்தன. வழிபாட்டுத்தலங்களிலும் கல்விக்கூடங்களி லும் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒதுக்கிவைக்கப்பட்டார்கள். எங்கும்மூடநம்பிக்கைகள் நிறைந்திருந்தன. இந்த நிலைமையை மாற்றுவதற்கான நெருப்பை மூட்டிவிட்டார் தமிழ்நாட்டிலிருந்து வந்து வைக்கம் போராட்டத்தை நடத்திய தந்தை பெரியார். சமூகக் கட்டமைப்பை உடைக்க முற்போக்கு சக்திகள் முயன்றன. அந்தப் போராட்டங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாமல், பிற சமூகங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டார்கள். இந்த வழியில்தான் இன்றைய பல மாற்றங்களைக் கொண்டுவர முடிந்தது.
1957ல் முதல் கம்யூனிஸ்ட் கட்சி அரசு அமைந்தபோது, முதலமைச்சர் இஎம்எஸ் சமூக மாற்றங்களுக்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால் அன்றைய ஒன்றிய ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அதற்கு முட்டுக்கட்டைபோட்டது. அண்மையில் கூட, சபரிமலை கோவில் பிரச்சனையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி பினராயி விஜயன் அரசுசெயல்பட்டபோது, அதை மதவாத அரசியலாக்க முயன்றதுபாஜக, காங்கிரஸ்சும் அதில் சேர்ந்துகொண்டது. மார்க்சிஸ்ட் கட்சியையும் இடது ஜனநாயக முன்னணியையும் சபரிமலைபக்தர்களுக்கு எதிரானவையாகச் சித்தரிக்க இரு கட்சிகளும் முயன்றன. கேரள மக்கள் அந்த மதவாத அரசியல்முயற்சியை நிராகரித்தார்கள். அடுத்தடுத்துத் தாக்கிய புயல்கள், நிபா வைரஸ், தற்போதைய கொரோனா சூழல்களில் இடதுசாரி அரசு மேற்கொண்ட சீரான முயற்சிகளை அங்கீகரித்து மறுபடியும் ஆட்சிப்பொறுப்பை அளித்திருக்கிறார்கள் என்றும் ராதாகிருஷ்ணன் கூறினார்.
தலித் கையால் பிரசாதம்
கே. பாலகிருஷ்ணன் தனது பாராட்டுரையில், “தந்தை பெரியார் நிகழ்த்திய கடைசி உரையில், ஆலயங்களில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக முடியாத நிலை நீடிப்பது தமது இதயத்தில் குத்திய முள்ளாக இருக்கிறது,” என்றார். அந்த முள்ளை அகற்றும் வகையில் 1970களின்தொடக்கத்தில் முதலமைச்சர் கலைஞர், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதற்கான சட்டம் கொண்டுவந்தார். நீதிமன்ற வழக்கு போன்றவற்றால் அது முடக்கப்பட்டபோது, அதற்கான அரசாணை பிறப்பித்தார். அர்ச்சகர் பயிற்சி நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன. பலர் பயிற்சி பெற்றார்கள்என்ற போதிலும் அதனைச் செயல்படுத்த முடியாத நிலைமையே தொடர்ந்தது. ஆனால் கேரளத்தில் பினராயி விஜயன் அரசு இதைச் செயல்படுத்தியது. அங்கே அரசுப்பணி என்றே அறிவித்து, இட ஒதுக்கீடு அடிப்படையில்அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வழியமைக்கப் பட்டது. இப்போது ஒரு ஆலயத்தில் அர்ச்சகராக இருக்கக்கூடியஒரு தலித் வழங்குகிற பிரசாதத்தை அனைத்துச் சாதி மக்களும் தயக்கமின்றி பெற்றுக்கொள்கிறார்கள்,” என்றார்.
கேரள மக்களின் எண்ணம் அந்த அளவுக்குப் பக்குவப்படுத்தப்பட்டிருக்கிறது. வரலாற்று இயக்கங்களும் இடது முன்னணி அரசின் அணுகுமுறைகளுமே இந்தப் பக்குவ வளர்ச்சிக்குக் காரணம். இந்தப் பக்குவத்தைச் சீர்குலைக்க பாஜக, காங்கிரஸ் மேற்கொண்ட முயற்சிகளைக் கண்டு இடது ஜனநாயக முன்னணி மிரண்டுவிடவில்லை, கேரள மக்களும் பின்வாங்கிவிடவில்லை. சொல்லப்போனால், எந்த சபரிமலை பிரச்சனையைப் பெரிதாக்க முயன்றார்களோ, அந்த வட்டாரம் சார்ந்த தொகுதிகளில் இடது ஜனநாயகமுன்னணிதான் வெற்றிபெற்றது என்றும் அவர்குறிப்பிட்டார்.மற்ற நாடுகளில் நிலப்பிரபுத்துவ ஆண்டான்-அடிமை முறை பின்னர் வர்க்கக் கட்டமைப்பாக உருவெடுத்தது. இந்தியாவில் அது சாதியக்கட்டமைப்பாகத் தொடர்கிறது. இங்குள்ள மனுநீதி வேறு எங்குமே காண முடியாதது. இந்தச் சமூகப் பாகுபாட்டை ஒழிக்காமல் சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிவிட முடியாது என்றும் அவர் கூறினார்.
உலக கவனம் ஈர்ப்பு
தொல். திருமாவளவன் உரையாற்றுகையில், “கோவில்களை நிர்வகிக்கிற துறையின் அமைச்சராக ஒரு தலித்தை நியமித்த செயலின் மூலம் சனாதனத்தை அசைக்கிற பலத்த அடி கொடுக்கப்பட்டிருக்கிறது, அதன் உச்சந்தலையில் இடி விழச் செய்யப்பட்டிருக்கிறது,” என்றார்.“கோவிலுக்குள் ஒரு தலித் பூசை செய்வதல்ல நம் நோக்கம். ஆனால் சிறிய குச்சியை ஆப்பாக வைத்து பெரியமரத்தையே அசைப்பது போல, சனாதனம் அசைக்கப் பட்டிருக்கிறது. ஆகவேதான், பினராயி விஜயன் இந்தச் செயலின் மூலம் இந்தியாவின் கவனத்தை மட்டுமல்ல, உலகத்தின் கவனத்தையே ஈர்த்திருக்கிறார். அனைத்துத் தரப்பு ஜனநாயக சக்திகளும் இதற்காகப் பாராட்டி நன்றி தெரிவிக்கின்றன,” என்றும் அவர் கூறினார்.
“எங்களிடம்” என்றால் யாரிடம்?
வழக்குரைஞர் அருள்மொழி, இந்து அறநிலையத் துறை உருவானதே முதலில் தமிழ்நாட்டில்தான் என்ற வரலாற்றையும், அதற்குத் தேவையாக இருந்த சூழல்களையும் எடுத்துரைத்தார். கேரளத்தில் ஒரு பெரும் மாற்றத்தைத் தனது ஒரு கையசைப்பால் கொண்டுவந்திருக்கிறார் பினராயி விஜயன் என்றார் அவர்.தமிழ்நாட்டில் அறநிலையத்துறையையே கலைத்துவிட வேண்டும் என்று கூறிக்கொண்டு சிலர், “கோவில் அடிமை மீட்போம்” என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியிருக் கிறார்கள். “கோவில்களை ஆலயங்களை எங்களிடமே விடுங்கள்” என்று முழக்கம் எழுப்புகிறார்கள். அந்த “எங்களிடம்” என்பது யாரிடம் என்பதுதான் கேள்வி. அதைக் கேட்டால், அதை ஏன் நீங்கள் கேட்கிறீர்கள் என்கிறார்கள்.
“ஏதோ இந்துக்களின் வழிபாட்டுத்தலங்களில்தான் அரசாங்கம் தலையிடுகிறது என்பது போல சித்தரிக்கிறார்கள். தேவாலயங்களின் நிர்வாகங்களைக் கண்காணிக்க அரசாங்க அதிகாரி இருக்கிறார். மசூதிகளுக்குப் பொறுப்பான வக்ஃப் வாரியம் அரசாங்க நிறுவனம்தான். இந்துக் கோவில்கள் முன்பும் அரசாங்கத்திடம்தான் இருந்தன – மன்னர்களிடம் இருந்தன. அது மாறியபிறகு மக்களாட்சி அரசாங்கத்திடம் இருக்கின்றன. இதை கைப்பற்றுவதற்கு நடக்கும் முயற்சிகளை அரசு சரியாகக் கையாள வேண்டும்,” என்றார் அவர்.
அரசியல் துணிவு
“ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை அறநிலையத்துறை அமைச்சராக்குவதற்கு அரசியல் துணிவு தேவை. அந்தத் துணிவு பினராயி அரசுக்கு இருக்கிறது,” என்று தொடங்கினார் பி. சம்பத். “இது தற்செயலான முடிவோ, திடீர் முடிவோ அல்ல. மார்க்சிஸ்ட் கட்சியின், இடது ஜனநாயகமுன்னணியின் கொள்கையிலிருந்து எடுக்கப்பட்ட முடிவு” என்றார்.வர்க்கப் போராட்டத்தோடு இணைந்ததே சாதிய ஒழிப்புப் போராட்டம் என்றும் அவர் குறிப்பிட்டார்.கே.சாமுவேல்ராஜ், “கேரளத்தில் அரசுத்துறையின் கீழ் வரும் கோவில் பணி அரசுப் பணிதான் என்ற அடிப்படையில் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது மிக முக்கியமான நடவடிக்கை. தமிழகத்திலும் அவ்வாறே நடக்க விரும்புகிறோம், நடக்குமென எதிர்பார்க்கிறோம்,” என்றார்.“பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் நோக்கங்களையும் வழிமுறைகளையும் பார்த்தால், பினராயி அரசின் இந்த நடவடிக்கை சமூகநீதிக்கான செய்தியாக வந்திருக்கிறது” என்று அவர் கூறினார்.
தொகுப்பு: அ.குமரேசன்