சென்னை:
தமிழகத்திற்கு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாமல் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் முடிந்தது.
காவிரி ஒழுங்காற்று குழுவின் 5-வது கூட்டம் தில்லியில் மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்திற்கு உட்பட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழகம் சார்பில் திருச்சி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் செல்வராஜு, காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியம், உறுப்பினர் பட்டாபிராமன், உதவி செயற்பொறியாளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தமிழக பிரதிநிதிகள் பேசியதாவது: தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக ஜூன் மாத ஒதுக்கீட்டு தண்ணீரான 9.19 டிஎம்சியை கடந்த ஒன்றாம் தேதியே திறந்து விட வேண்டும் என கடந்த மாதம் 28 ஆம் தேதி நடந்த காவிரி ஆணையத்தின் கூட்டத்தில் கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், ஜூன் 8 தேதியை கடந்தும் கூட தண்ணீரை திறந்து விடாமல் கர்நாடக அரசு தாமதம் செய்து வருவதால், தமிழக விவசாயிகள் குறுவை சாகுபடி செய்வது கேள்விக்குறியாக உள்ளது. இது உச்சநீதிமன்ற உத்தரவை மீறியச் செயல். எனவே, காவிரியில் உடனடியாக தண்ணீரை திறந்து விடும்படி கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதற்கு கர்நாடக தரப்பினர் கூறுகையில், பருவமழை எங்களுக்கு போதுமானதாக இருந்தால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியும் என்று தெரிவித்தனர். கேரளா மற்றும் புதுவை மாநிலத்தின் தரப்பிலும் அவர்களின் தண்ணீர் பங்கீடு தொடர்பான புள்ளி விவரங்களை சமர்ப்பித்தனர். ஆனால், தமிழத்துக்கான ஜூன் மாத நீரை திறந்து விடுவது குறித்து எந்தமுடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் முடிவுற்றது. இதன் மூலம், காவிரியில் இருந்து தமிழகத்தின் குறுவை சாகுபடிக்கான நீர் வருவதற்கு வாய்ப்பில்லை என்று தெரிகிறது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து காவிரி டெல்டா விவசாயிகள் கூறுகையில், குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்படாவிட்டால் காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதிப்பு மாவட்டங்களாக அறிவித்து,விவசாயிகளுக்கும் விவசாய தொழிலாளர்களுக்கும் மத்தியஅரசின் பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து நிவாரணத்தை தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.