tamilnadu

குறுவை சாகுபடி பிரிமியம் விவகாரம்... பயிர்காப்பீட்டு திட்டத்தை சீரழிக்கும் பாஜக அரசு.. முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை....

சென்னை:
பயிர்காப்பீட்டு திட்டத்தில் தனியாரை புகுத்தி நோக்கத்தையே சிதைத்து வரும் ஒன்றிய பாஜக அரசால் பாதிக்கும் தமிழக விவசாயிகளை காப்பாற்ற முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலபொதுச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்ட பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் பாஜக அரசு தனியார் நிறுவனங்களை புகுத்தியது. இதன் விளைவாக விவசாயிகளுக்கு உரிய காலத்தில் காப்பீட்டுத்தொகை கிடைக்காமலும், பாதிப்பின் அளவைக் குறைப்பது, காப்பீட்டு தொகையை குறைப்பது அதன் மூலம் தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபமடிப்பது என இத்திட்டத்தின் நோக்கத்தையே சிதைத்தது இந்திய ஒன்றிய பாஜக அரசு.இந்த நிலையில் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கான பிரிமியம் தொகை விவசாயிகளிடமிருந்து பெறப்படவில்லை. கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு கடன்தொகையிலிருந்து பிடித்துக் கொள்வார்கள். அந்த வகையிலும் இதுவரை பிரிமியம் பிடிக்கப்படவில்லை. இதனால் குறுவை சாகுபடிக்கான காப்பீட்டுத்தொகை விவசாயிகளுக்கு கிடைக்க வழி இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பிரிமியம் செலுத்துவதற்கான காலக்கெடு ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

காப்பீட்டு நிறுவனங்கள், ஒன்றிய- மாநில அரசுகளின் பங்கு தொகையை உயர்த்திடக் கோரியும் பிரிமியம் தொகையை அதிகரிக்க கோரியும் வற்புறுத்துவதால் இதில் முடிவு எட்டப்படாத நிலையில் எந்த காப்பீட்டு நிறுவனமும், பயிர் காப்பீடு செய்ய முன்வரவில்லை என்று தெரிய வருகிறது.எனவே, தமிழக முதல்வர் இந்தப் பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு குறுவை சாகுபடிக்கான பிரிமியம் தொகை விவசாயிகளிடமிருந்து பெறவும், இதற்கேற்ப பிரிமியம் செலுத்துவதற்கான காலத்தை நீட்டித்து வழங்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.இல்லையென்றால், லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் இழப்பு ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம். காலநீட்டிப்பு செய்யும் போது கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், ஒன்றிய அரசு மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் ஒப்புதலை பெறாத காரணத்தினால் பிரிமியம் செலுத்தியும் விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை கிடைக்காமல் பெரும் இழப்புக்கு ஆளாயினர். இன்னமும் 2018-19, 2019-20 ஆகிய ஆண்டுகளுக்கு வழங்க வேண்டிய காப்பீட்டு தொகை பல மாவட்டங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. எனவே, பயிர்க்காப்பீட்டு பாக்கித் தொகையை பெற்றுத்தரவும் தமிழக அரசு கவனம் செலுத்துமாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் சண்முகம் தெரிவித்திருக்கிறார்.