கடலூர், ஏப்.13-மோடி மீண்டும் பிரதமரானால் இந்தியா இருள் சூழ்ந்துவிடும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கடலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.வி.எஸ்.ரமேசை ஆதரித்து விருத்தாசலம், நெய்வேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு உரையாற்றுகையில், “ பாஜகவுக்கு வாக்களித்தால் நாட்டின் எதிர் காலம் இருள் மயமாகிவிடும்” என்றார்.திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தேர்தலுக்காக சேர்ந்தது அல்ல. கடந்த ஆண்டுகளாக மக்கள் நலன் சார்ந்தும், மக்கள் கொள்கை சார்ந்த போராட்டத்தால் இணைந்தது தான் என்றும் அதிமுக-பாஜக-பாமக அணி சந்தர்ப்பவாத கொள்ளை கூட்டணி என்றும் அவர் விமர்சித்தார். இந்தியாவில் அரசு, தனியார் துறைகளிலும் சிறந்து விளங்கிய ஆறு பல்கலைக்கழகங்களை தேர்ந்தெடுத்து தலா ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளது. அதில் ரிலையன்ஸ் பல்கலைக்கழக மும் ஒன்று. ரிலையன்ஸ்க்கு அப்படி ஒரு பல்கலைக்கழகமே இல்லை என்றும் ஜி. ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.
தமிழகத்தின் உரிமையை பறிக்கும் பொழுது கவலைப்படாதவர் தான் எடப்பாடி, தமிழகத்தை எடை போட்டு விற்கும் அரசாகத் தான் எடப்பாடி அரசு உள்ளது. மத்தியில் ஆட்சி மாற்றம் நடை பெறுகின்ற அதே சூழலில் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் நடைபெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதனால் அதிமுக கூட்டணியை படுதோல்வி அடையச் செய்ய வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.நெய்வேலி எட்டுரோட்டில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகரச் செயலாளர் ஆர்.பாலமுருகன் தலைமை தாங்கினார். விருத்தாசலம் ஸ்டேட் வங்கி முன்பு வட்டச் செயலாளர் என்.எஸ்.அசோகன் தலைமையில் பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் டி. ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.திரு அரசு, வி. உதயகுமார், குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலாளர் தண்டபாணி, பண்ருடிட்டி நகரச் செயலாளர் உத்தராபதி, வட்டக்குழு உறுப்பினர் ஏ.சந்திரசேகரன், மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்று பேசினர்.