tamilnadu

img

பாஜக-அதிமுக அரசுகளால் நெருக்கடி அதிகரிப்பு மக்களை திரட்டி போராட்டம்: கே. பாலகிருஷ்ணன்

சென்னை:
டெல்டா மாவட்டங்கள் வேளாண் மண்டலமாக பாதுகாக்கப்படும் என்ற அறிவிப்பு மட்டும் போதாது. சட்டமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என தமிழக அரசை கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2 நாள்மாநிலக்குழு கூட்டம் சென்னையில் திங்கட்கிழமை (பிப். 10) துவங்கியது. இந்த கூட்டத்திற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

இரண்டு நாட்கள் நடைபெறும் மாநிலக்குழு கூட்டத்தில் தமிழக அரசியல் நிலைமை குறித்தும் விவாதிக்கிறோம். நீட் தேர்வில் தமிழகத்திற்கு விதி விலக்கு அளிக்க மத்திய அரசு மறுக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு,தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை பல எதிர்ப்புகளுக்கிடையிலும் அமல்படுத்திக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. தமிழகத்தில் இதற்கெதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.கிராமப்புற மக்களை பாதுகாக்கும் வேலைஉறுதி திட்டத்தை மோடி அரசு சீர்குலைக்க முயற்சிக்கிறது. 1,200 கோடி ரூபாய் தொழிலாளர்க ளுக்கு பாக்கி வைத்துள்ளது மத்திய அரசு. அந்த திட்டத்தை செயல்படுத்தினால்தான் கிராமப்புறமக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க முடியும்.தமிழகத்தில் தொழில் நெருக்கடி ஏற்பட்டு, பல தொழிற்சாலைகள் மூடுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. பல தொழிற்சாலைகளில் முழுமையான வேலை இல்லை, 15 நாட்கள், 20 நாட்கள் என வேலை வழங்கப்படும் நிலை உள்ளது. ஏற்கனவே வேலையில்லா திண்டாட்டத்தால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகளிடம் தவறான கொள்கைகளால் பெரிய நிறுவனங்கள், சிறு குறுந் தொழிற்சாலைகள் நசிந்து போயுள்ளன. இதனால் வேலை இல்லாத திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இவற்றிற்கெதிராக மக்களை திரட்டி அடுத்தகட்ட போராட்டங்களுக்கு திட்டமிட உள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரஜினியால் கூட்டணிக்குள் எந்த பாதிப்பும் இல்லை...
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் தொடர்ச்சியாக பலர் கைது செய்யப்பட்டு வருவதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த பாலகிருஷ்ணன், “தோண்ட தோண்டபல உண்மைகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. காவல்துறை பணியிலும் நடந்த முறைகேட்டால் பணி நியமன ஆணை வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.குருப் 1 தேர்விலும் முறைகேடு நடைபெற்றுள்ளது. அரசு கல்லூரி துணைப் பேராசிரியர்களின் நியமனத்தில் ரூ.  700 கோடி லஞ்சம் பெற்றிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இதில் அதிகாரிகள், ஊழியர்கள் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ளும் முயற்சி நடக்கிறது. அமைச்சர்களின் தொடர்பு இல்லாமல் இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் சிபிஐ விசாரணை வேண்டும்” என்றார்.நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரித் துறை குறித்த கேள்விக்கு, ஆளும் கட்சிக்கு ஆதரவாக கருத்து கூறினால் ஒரு அணுகுமுறை, எதிராக கருத்து கூறினால் ஒரு அணுகுமுறை. ஏன்இரண்டு விதமான அணுகுமுறை பாஜக அரசு கையாண்டு வருகிறது என்று குற்றம் சாட்டினார்.அரசுக்கு கட்டவேண்டிய வருமான வரியை கட்டாமல்  வரி ஏய்ப்பவர்கள்  யாராக இருந்தாலும் அவர்களது வீட்டிலும் சோதனை நடத்த எந்தவித ஆட்சேபனையும் இல்லை. அதை நாங்கள் எதிர்க்கவும் இல்லை. ஏழை எளியஉழைப்பாளி மக்களுக்கு வரி விதிப்பதை விட பெரு முதலாளிகளுக்கும், கூடுதல் வருமானம் உள்ளவர்களிடம் அதிக வரி வசூலிக்க வேண்டும் என்றும் கோருகிறோம் என்றார்.வருமான வரி சோதனை என்ற பெயரில் மத்திய அரசும், வருமான வரித் துறையும் தங்களுக்கு வேண்டாதவர்களை பழி வாங்கும் நோக்கில் நடந்துகொள்கிறது. இதுவரை நடந்த வருமான வரி சோதனையில் பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறுகிறார்கள். அதுகுறித்த முழுவிவரமும் வெளியாகவில்லை.  யாரும் கைது செய்யப்படாதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.

நடிகர் விஜய் மத்திய அரசின் ஜி.எஸ்.டி உள்ளிட்ட பல, மக்களுக்கு எதிரான திட்டங்களை விமர்சித்துள்ளார். எனவே அவரின் வாயை அடைப்பதற்காகத்தான் இந்த சோதனையா? என்ற சந்தேகம் எழுகிறது. ரஜினிகாந்த் மீது நிலுவையில் இருந்த வருமான வரி  வழக்கு திரும்பப் பெறப்பட்டது ஏன்? என்றும்அவர் அரசியலுக்கு வரலாம். மக்கள் உணர்வுகளுக்கு மாறாக கூறி வரும்  கருத்துகள் ஏற்புடையதல்ல. அதைத்தான் நாங்கள் விமர்சிக்கிறோம். பாஜக, ஆர்எஸ்எஸ் குரலை அவர் பிரதிபலிக்கிறார். ரஜினி அரசியலுக்கு வருவதால் மதச்சார்பற்ற கூட்டணிக்குள் எந்த மாற்றங்களும் ஏற்படாது என்றும் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.