tamilnadu

img

வேளாண் பாதுகாப்பு மண்டலம் கண்காணிப்பு குழுவில் விவசாயத் தொழிலாளர் பிரதிநிதிகளையும் இணைத்திடுக...

சென்னை:
டெல்டா மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்துள்ள தமிழகஅரசு, அதை கண்காணிப்பதற்கு போடப்பட்டுள்ள குழுவையும், விவசாயத் தொழிலாளர்கள் சங்கப் பிரதிநிதிகளையும் இணைத்திடவேண்டுமென அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர், பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:நீர்வழி ஆதாரப் பிரிவிலும் தமிழகத்தின்குறிப்பிடத்தக்க வளத்தைப் பெற்றுள்ள டெல்டா மாவட்டப் பகுதிகளை, விவசாயத்தை சீரழிக்கும் விதமாக கொண்டு வரப்படும் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்டவற்றிலிருந்து, விவசாயத்தைப் பாதுகாக்க இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பின்னணியில், காவிரி டெல்டாபகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவித்து தமிழக அரசு சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றியுள்ளது.

அதோடு அதை கண்காணிக்க தமிழக அரசு 20 அமைச்சர்கள் உள்ளிட்ட 30 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இதில் தமிழகத்தின் விவசாயிகள் மேம்பாட்டிற்காக - விவசாயத் தொழிலாளர்கள் நலன்களுக்காக அனுதினமும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆக்கப்பூர்வமான சங்கப் பிரதிநிதிகளையும் இணைக்க வேண்டும். குறிப்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் - அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பிலுமான பிரதிநிதிகளையும் சேர்த்து இறுதிப்படுத்த வேண்டும்.காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது தாமதமான செயல் என்றாலும் வரவேற்கத்தக்கது. இதை நிறைவேற்றுவதற்கு கடந்த காலங்களில் ஜனநாயகப்பூர்வமான முறையில் போராட்டங்களை நடத்தியவர்கள் மீது பொய் வழக்குகள் புனையப்பட்டுள்ளன. இந்த வழக்குகளையும் எவ்வித தாமதமும் இன்றி வாபஸ் பெறுவதே பொருத்தமான நடவடிக்கை என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.