சென்னை, மே 25-நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் உள்பட 8 அணைகள் வறண்டு காட்சியளிக்கின்றன. அந்த மாவட்டத்தில் மணிமுத்தாறு,பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவி நயினார், வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு என மொத்தம் 11 அணைகள் உள்ளன.இதில் மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு ஆகிய 3 அணைகளில் தண்ணீர் இருப்பு உள்ளது. கடனாநதி, ராமநதியில் தண்ணீர் சுத்தமாக இல்லை. கருப்பா நதி அணை முழுவதும் வறண்டு காணப்படுகிறது.குண்டாறு, அடவிநயினார், வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு ஆகிய அணைகளும் நீரோட்டம் இல்லாததால் வறண்டு விட்டன. தென்மேற்கு பருவ மழை பெய்தால் தான் வறண்டு உள்ள 9 அணைகளுக்கும் தண்ணீர் வரும். இல்லாவிடில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது.மேற்கு தொடர்ச்சி மலைகளில் ஜூன்மாதம் பின்னர் மழை பெய்தால் திருநெல்வேலி மாவட்டத்தின் அணைகளுக்கு நீர்வரத்து வரும். அதுவரை மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.