சென்னை,ஜூன் 6- சட்டவிரோதமாக நிலத்தடி நீரைஉறிஞ்சி எடுக்க உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூரில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதை உடனடியாக தடுத்துநிறுத்த வேண்டும் என்று மாவட்டஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக ஷீலா தேவி என்பவர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தேவராஜ் என்ற நபர் எந்த அனுமதியும் இல்லாமல் நிலத்தடி நீரை உறிஞ்சி வருவதாகவும் அதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கும், பூவிருந்தவல்லி தாசில்தாருக்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.இந்த வழக்கின் மீதான விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது, சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சுவது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என ஏற்கனவே, உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். வழக்கின் மீதான விசாரணையை 10ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.