சென்னை:
பீமாகோரேகான் சதி வழக்கில் கைது செய்தவர்களை விடுதலை செய்யக்கோரி சிறைப்படுத்தப்பட்டோர் விடுதலை இயக்கம் சார்பில் செப்.15 அன்று மாநிலம் முழுவதும் மனித சங்கிலி இயக்கம் நடத்தப்படுகிறது.
இந்திய ஒன்றிய அரசின் இந்த பழிவாங்கும் நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புகள் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஒருங்கிணைப்பில் “பீமா கொரேகான் சதி வழக்கில் சிறைப்படுத்தப்பட்டோர் விடுதலை இயக்கம்” என்ற பெயரில் உருவாக்கியுள்ளனர்.இந்த அமைப்பின் தலைவர்கள் செவ்வாயன்று (செப்.14) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, தமிழ்நாடு முழுவதும் செப். 15 அன்று மனித சங்கிலி நடத்துவதற்கு வேண்டுகோள் விடுத்து அனைத்து மாவட்டங்களிலும் பிரச்சாரம் நடத்தப்பட்டது. அதன்அடிப்படையில் மாநிலம் முழுவதும் இந்த மனித சங்கிலி நடத்தப்படுகிறது”என்றனர்.
தமிழகத்தின் ஜனநாயக, முற்போக்கு, தலித், சிறுபான்மை, சமூக நீதி, தொழிற் சங்க, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், வாலிபர், மாணவர், மாதர் சங்கங்களின் தலைவர்கள் மனித சங்கிலி இயக்கத்தில் பங்கேற்கிறார்கள் என்றும் கே. சாமுவேல்ராஜ், பெ.சண்முகம் ஆகியோர் தெரிவித்தனர்.சென்னை பெரம்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே. மகேந்திரன், வள்ளுவர் கோட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம், மு. வீரபாண்டியன் (சிபிஐ), மாதர் சங்கத் தலைவர் எஸ். வாலண்டினா, வன்னியரசு (விசிக) ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
சைதாப்பேட்டையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சிறப்புத் தலைவர் பி.சம்பத், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் ம.செ. சிந்தனை செல்வன், மாதர் சங்க பொதுச் செயலாளர் பி.சுகந்தி கலந்துகொள்கிறார்கள்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ், சேலத்தில் கு. ஜக்கையன், கொளத்தூர் மணி உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.
கோவையில் பி.ஆர். நடராஜன் எம்பி, அதியமான், வெண்மணி, ராமகிருஷ்ணன். மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், திமுக நிர்வாகி பொன். முத்துராமலிங்கம் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர். நாகப்பட்டினத்தில் நாகைமாலி எம்எல்ஏ., பெரம்பலூரில் மா.சின்னதுரை எம்எல்ஏ ஆகியோரும் பங்கேற்கின்றனர்.ஈரோட்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் ஆதவன் தீட்சண்யா, திருப்பூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.பாலா, திண்டுக்கல்லில் முன்னாள் எம்எல்ஏ கே. பாலபாரதி, இந்திய மாணவர் சங்கத்தின் மாநில செயலாளர் வி.மாரியப்பன், திருத்தணியில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. டில்லிபாபு, திருவண்ணாமலையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டி.சரவணன், விருதுநகரில் எம்.ஊர் காவலன், திருவாரூரில் விவசாயத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகியோரும் மனித சங்கிலி இயக்கத்தில் பங்கேற்கிறார்கள்.