சென்னை:
சிறு தொழில்களுக்கு வழங்கப்படும் சிறப்பு கடன் ஹோட்டல் தொழில்களுக்கு வழங்கப்படாதது ஏன் என்று சென்னை ஹோட்டல்கள் சங்க தலைவர் எம்.ரவி வினவியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கடந்த ஜூன் மாதம் ஹோட்டலில் அமர்ந்து சாப்பிடுவதற்கு அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து நாங்கள் எங்களுடைய ஊழியர்களை பலத்த சிரமத்துக்கு இடையே வேலைக்காக திரும்ப அழைத்தோம். அடுத்த சில நாட்களில் பார்சல் மட்டுமே வழங்கவேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. இதனால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்துபோனது. ஊழியர்களுக்கு சாப்பாடு, தங்கும் வசதி, பாதுகாப்பு, சம்பளம், கட்டிட வாடகை என நெருக்கடிக்கு மேல், நெருக்கடிகளை சந்திக்கவேண்டிய நிர்ப்பந்தம் எங்களுக்கு ஏற்பட்டது.
தற்போது வாடிக்கையாளர்கள் ஹோட்டலில் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் நடைமுறை இருப்பதால் சொந்த ஊர்களுக்கு சென்ற ஊழியர்களால் திரும்ப வரமுடியவில்லை. ரெயில், பஸ் போக்குவரத்துகளும் இயங்கவில்லை. கொரோனா பீதியில் ஹோட்டலுக்கு வந்து சாப்பிட யாரும் வருவதில்லை. இதுபோன்ற காரணத்தால் சென்னையில் சுமார் 90 சதவீத ஹோட்டல்கள் சனிக்கிழமை அடைக்கப்பட்டிருந்தன. வெறும் 10 சதவீத ஹோட்டல்களே திறந்திருந்தன. திறந்திருந்த ஹோட்டல்களும் மீண்டும் பார்சல் வழங்கும் முறைக்கு மாற உள்ளன.அரசு அறிவித்த திட்டங்கள் எதுவும் எங்களுக்கு வந்து சேரவில்லை. ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யவேண்டும். கோரப்படாத நிதி மூலம் ஹோட்டல் ஊழியர்களுக்கு ஈ.எஸ்.ஐ., பி.எப். முழுவதையும் அரசே செலுத்தவேண்டும். மின்சார கட்டணம், கட்டிட வரி, தண்ணீர் வரியை ரத்து செய்யவேண்டும். ஹோட்டல்கள் அடைக்கப்பட்டிருந்த காலத்துக்கான வாடகையை ரத்து செய்யவேண்டும். மேலும் 6 மாதங்களுக்கு ஹோட்டல்களுக்கு 50 சதவீத வாடகை நிர்ணயம் செய்யவேண்டும்.
இந்த கோரிக்கைளை அரசிடம் நாங்கள் ஏற்கனவே முன்வைத்திருக்கிறோம். ஆனால் அவர்கள் எதையுமே நிறைவேற்றி தரவில்லை. அரசு அறிவித்த சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன்களை வங்கிகள் எங்களுக்கு தர மறுக்கின்றன. எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேறினால்தான் ஹோட்டல்களை மீண்டும் திறக்கமுடியும். கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எங்களை நேரில் அழைத்து பேசவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.சென்னையின் புறநகர் பகுதிகளான செங்குன்றம் போன்ற பகுதிகளில் ஹோட்டல்களில் 50 சதவீத இருக்கையில் வாடிக்கையாளர்களை அமர வைத்து உணவுகள் வழங்கப்பட்டது. அத்தகைய ஹோட்டல் உரிமையாளர்கள் கூறும்போது, “50 சதவீத இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்களை அமர வைப்பது என்பது சற்று சிரமமான ஒன்றாக தெரிகிறது. காரணம், ஒரு குடும்பத்தினர் 4, 5 பேர் வந்தால் அவர்களை தனித்தனியாக ஒவ்வொரு இருக்கையிலும் அமர வைப்பது என்பது கஷ்டமான ஒன்றாக உள்ளது. எனவே எப்போது 100 சதவீத இடங்களிலும் வாடிக்கையாளர்களை அமர வைக்க முடியுமோ அப்போது தான் எங்களுக்கு வியாபாரம் முழுமையாக நடைபெறும்” என்று தெரிவித்தனர்.