tamilnadu

img

பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு அரிசி- பருப்பு வழங்க அரசு உத்தரவு

சென்னை:
பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு கடந்த மார்ச் மாதம் 16 ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.இதனிடையே, கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் ஆறாம் கட்ட பொது முடக்கம் பல்வேறு தளர்வுகளுடன் வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை திறப்பதற்கான தடை தொடருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளிகள் திறப்பு தள்ளி போய் கொண்டே உள்ளது.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பும் வரை உலர் உணவுத்திட்டத்தை தொடர ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் வரை மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுகளை தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் அரசு குறிப்பிட்டுள்ளது.