tamilnadu

img

அரசு மருத்துவமனைகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவை: அமைச்சர் தகவல்

சென்னை:
கொரோனா காலத்திலும் தொய்வில்லாமல் இதர சிறப்பு சிகிச்சைகள் நடைபெறுவதாக, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக, அமைச்சர் செவ்வாயன்று (ஆக.25) வெளியிட்ட அறிக்கை:

“தமிழக அரசு, தமிழ்நாடு, கொரோனா தொற்று காலத்திலும், கொரோனா தொற்று அல்லாத பிற நோயாளிகளுக்கும் தங்கு தடையின்றி சிகிச்சைகளை அளித்து வருகிறது.தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மார்ச் 2020 முதல் இதுவரை 20 ஆயிரத்து 550 நபர்களுக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டுள்ளது. இதில் 1,077 நபர்கள் கோவிட் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 1,347 நபர்களுக்கு ஆஞ்சியோகிராம் மற்றும் 439 நபர்களுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சவாலான சூழ்நிலையில் கோவிட் தொற்றால் பாதிக்கப் பட்ட 4,154 கர்ப்பிணித் தாய்மார்களும் 37 ஆயிரத்து 436 குழந்தைகளும் உரிய சிகிச்சை பெற்றுப் பயனடைந்துள்ளனர்.805 ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு 88 ஆயிரத்து 280 அலகு ரத்தம் பெறப்பட்டுள்ளது. இந்த சிறப்புச் சிகிச்சைகள் மற்றும் மருத்துவச் சேவைகள் தொய்வில்லாமல் நடைபெற்றதன் காரணத்தினால், கொரோனா தொற்று காலத்தில் பல விலைமதிப்பில்லாத உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.கொரோனா தொற்றினால் தனியார் மருத்துவமனைகளை நோயாளிகள் அணுக இயலாத நிலையில் கூடுதல் சேவைகளையும் அரசு மருத்துவமனைகள் திறம்பட எதிர்கொண்டு அர்ப்பணிப்பு உணர்வுடன் அரசு மருத்துவமனைகளில் உயரிய சேவைகள் வழங்கப்பட்டு பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.