கடந்த இரண்டு மாதங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், இதர மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. கொரோனா தொற்றாளர்களின் உயிர்களைப் பாதுகாக்க படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் மே மாதத்தில் மருத்துவ முன்களப் பணியாளர்களின் பணிச்சுமை 3.5 மடங்கு அதிகரித்துள்ளது. பல அரசு மருத்துவமனைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. மருத்துவ மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் 2ஆயிரம் மருத்துவர்கள், 6 ஆயிரம் பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் 2 ஆயிரம் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணியமர்த்தப்படுவதாக அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் கே.செந்தில், “கடந்த 15-20 நாட்களில், தொற்றுப்பரவலால் மருத்துவர்களின் பணி கூடுதலாகியுள்ளது. ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. சென்னை, மதுரை போன்ற இடங்களில், மருத்துவர்-நோயாளி விகிதம் 1:30, செவிலியர்-நோயாளி விகிதம் 1:25 அல்லது 1:30. என்ற அடிப்படையில் உள்ளது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், பெரும்பான்மையான நோயாளிகள் ஆக்சிஜன் ஆதரவில் உள்ளனர், 15 நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் தேவை. 40 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவமனை ஊழியர் தான் இருக்கிறார்” என்றார்.
ஊழியர்களின் மனச்சோர்வை குறைக்க...
அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு மூத்த மருத்துவர் ஒரு கூறுகையில், “வார்டுகளில் முப்பது படுக்கைகளுக்கு ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் உள்ளனர். இதை இரட்டிப்பாக்க வேண்டும். ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது அவசியம். இதன் மூலம், முன்னணி ஊழியர்களின் உடல் மற்றும் மனச் சோர்வைக் குறைக்கும். இது நோயின்மையை கட்டுப்படுத்த உதவும். இறப்பு விகிதத்தையும் குறைக்கும். இது மருத்துவமனை நிர்வாகத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தும்” என்றார். சேவை மருத்துவர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி சங்கப் பொதுச் செயலாளர் ஏ.ராமலிங்கம் கூறுகையில், “ஐ.சியுவில் அனுமதிக்கப்பட்ட ஒரு நோயாளியை முழுமையாகக் கவனித்துக் கொள்வது ஒரு செவிலியரின் பணியாகும். அவர் தான் நோயாளிகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் கொடுப்பது. ஊசியை செலுத்துவது போன்ற பணியை மேற்கொள்கின்றனர். செவிலியர்கள் பங்களிப்பு முக்கியமானது. அரசாங்கம் பணியிடங்களை நிரப்ப விரைந்து செயல்பட வேண்டும். தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பணியாளர்கள் நியமனம் காலமுறை ஊதிய அடிப்படையில் இருக்க வேண்டும்” என்றார்.
அரசாணையில் திருத்தம் செய்க!
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கூறுகையில், “ அரசு ஆணை 4 (டி) 2 இன் கீழ் மறுசீரமைப்புப் பயிற்சியில் பல மருத்துவ பதவிகள் குறைக்கப்பட்டுள்ளன.இப்போது, படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. புற நோயாளிகள் வருகையும் அதிகரித்து வருகிறது. எனவே 4 (டி)2 அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும் என்றார்.மருத்துவமனை ஆணையத்தின் உத்தரவை மேற்கோள் காட்டிய சில ஊழியர்கள், “ கொரோனா படுக்கைகளுக்கான எண்ணிக்கை அதிகரிக்கப்படும் நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மருத்துவர்கள், பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்களும் நோய்வாய்ப்பட்டுள்ளனர். கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றுபவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவர், தொற்று கண்டறியப்பட்டால் அவர்கள் 15 நாட்கள் ஓய்விலிருக்க வேண்டும்” என்றனர்.