சென்னை,ஆக.29- தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே அசுர வேகத்தில் உயர்ந்த வண்ணமே உள்ளது. இம்மாத தொடக்கத்தில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.26 ஆயிரத்து 480 க்கு விற்றது. அதன்பின் தங்கம் விலையில் ஏற்ற நிலையே இருந்தது. விலை சற்று குறைந்தாலும், அதிகரிக்கும் விலை அதிகமாக இருந்ததால் ‘ஜெட்’ வேகத்தில் சென்றது. இம்மாத 3-வது வாரத்தில் தங்கம் விலை ரூ. 29 ஆயிரத்தை தாண்டியது. அதன் பின் விலை குறையா மல் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் ரூ.30 ஆயிரத்தை தங்கம் விலை தொடும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் தங்கம் விலையில் வியாழனன்று (ஆக.29)புதிய உச்சமாக ரூ.112 அதிகரித்து ஒரு பவுன் ரூ.29 ஆயிரத்து 816 க்கு விற்கிறது. கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ரூ.3 ஆயிரத்து 727 ஆக உள்ளது. கடந்த 4 வாரங்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 3 ஆயிரத்து 336 அதிகரித்து இருக்கிறது. தங்கம் விலை ரூ. 30 ஆயிரத்தை நெருங்கி உள்ளது பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதும் உலக சந்தையில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரித்து வருவதும் தங்கத்தின் விலை ஏற்றத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. வெள்ளி கிலோவுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.52 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.52.20க்கு விற்கிறது.