tamilnadu

img

சென்னை முழுவதும் காலிக்குடங்கள்

சென்னை:
கோடை வெயிலும் அனல் காற்றும் ஒருபுறம் வறுத்தெடுக்க, 141 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்டிருக்கும் வறட்சியால் சென்னை முழுவதும் காலிக் குடங்களுடன் மக்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். காரணம், தண்ணீர் பஞ்சம். பணம் கொடுத்து விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டும் தண்ணீர் கிடைக்காமல் தவியாய்த் தவிக்கும் சென்னை மாநகர மக்கள் நொந்து போயிருக்கிறார்கள்.

மேய்ச்சல் நிலமாக ஏரிகள்!
சென்னை மாநகரின் குடிநீர் தாகத்தை தீர்த்து வைக்கும் சோழவரம் ஏரி வறண்டு ஆடு,மாடுகளின் மேய்ச்சல் நிலமாக மாறிவிட்டது. முதன்மையான செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் ஏரிகளில் சொற்ப அளவே தண்ணீர் இருக்கிறது. பூண்டிக்கு திறக்கப்படும் கிருஷ்ணா நீர் மூன்று மாதத்திற்கு முன்பே நிறுத்தப்பட்டு விட்டதால் மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற முடியாமல் சென்னை குடிநீர் வாரியம் திக்குமுக்காடி வருகிறது.

சென்னை குடிநீர் வாரிய குழாய்கள், அடிபம்புகள் பெரும்பாலும் காய்ந்த கருவாடாக மாறிவிட்டன. லாரித் தண்ணீருக்காக வரிசையில் காத்திருந்தாலும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அதுவும் ஒரு லாரி குடிநீர்தான் வருகிறது. 'பலாப்பழத்தை ஈ மொய்ப்பது' போன்று காலிக்குடங்களுடன் மக்கள் கூட்டம் சூழ்ந்து விடுகிறது. ஒரு குடும்பத்திற்கு ஐந்து குடத்திற்கு மேல்கிடைப்பது ‘குதிரைக் கொம்பாகிவிட்டது’. ஐந்து குடம் தண்ணீர் ஒரு குடும்பத்திற்கு ஒருநாளைக்கு போதுமா? குடிதண்ணீருக்கு அல்லாடும் ஆண்களும், பெண்களும் சைக்கிள், மினி லாரி, ஆட்டோக்களில் காலிக் குடங்களை சுமந்து கொண்டு தெருத் தெருவாக நெடுந்தொலைவு அலைந்து கொண்டிருக்கிறார்கள். 

சென்னை மாநகரில் எல்லோரும் குடித்து வந்த மெட்ரோ வாட்டர் கேனிற்கு எப்போதும் ‘தனி மவுசு’ உண்டு. குடிப்பதற்கும், சமைப்பதற்கும் மட்டுமின்றி அன்றாடத் தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்தனர். இதற்கு வேட்டு வைத்தவர் ஜெயலலிதா அமைச்சரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற  கே.பி. முனுசாமி. குடிநீர் விநியோகம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என அவர் தொடங்கி வைத்ததை இன்றைய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். 
கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து கொண்டு வரப்படும் தண்ணீர் சென்னை மக்களின் ‘கண்ணீரை’ ஓரளவு குறைத்தது. இதனால் சிதம்பரம் அருகே நெய்வேலி நீர்ப்பரப்பு பகுதிகளில் அமைந்துள்ள பரவனாறு ஏரி பாசன விவசாயிகள் ஒருபோக பயிர் சாகுபடியை தியாகம் செய்துள்ளனர். காரணம்,சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்காக அந்த ஏரியில் இருந்து தண்ணீர் எடுப்பதால் விவசாயிகள் யாரும் பயிர் சாகுபடி செய்யக் கூடாது என்று மாவட்ட நிர்வாகம் ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலர்கள் (விஏஓ) அலுவலகங்களிலும் அறிவிப்பு செய்துள்ளது. இதன் மூலம்  60 மில்லியன் லிட்டர்  எடுத்து வரப்படுகிறது. ஆனாலும், சென்னையின் தாகம் தணிக்க முடியவில்லை.

“நீரின்றி அமையாது இவ்வுலகு” என்ற வள்ளுவரின் கூற்றுப்படி, நீர் இல்லை என்றால் உலகில் எந்த உயிரினமும் வாழ முடியாது. உணவு முதல் கழிப்பறை வரை தண்ணீரையே சார்ந்திருப்பதால் இது யதார்த்தமாகும்.ஒரு மனிதன் அன்றாடம் 4 முதல் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சமையல் தேவைக்கு ஐந்து லிட்டருக்கு மேல் செலவாகிறது. கை கழுவ, பாத்திரங்கள் சுத்தப்படுத்த குறைந்தபட்சம் 20 லிட்டர் தேவையாகும். குளியல், கழிப்பறை, துணி துவைக்க என 40 முதல் 50 லிட்டர் தண்ணீர் செலவாகிறது. இது தவிர வீட்டு பராமரிப்புக்கு 150 லிட்டராவது அவசியமாகிறது. மக்கள் தொகை அதிகரிக்க, அதிகரிக்க தண்ணீரின் தேவையும் அதிகரிக்கிறது. மக்கள் தொகை மூன்று மடங்கு அதிகரித்தால் தண்ணீரின் தேவையோ ஐந்தாறு மடங்கு அதிகரிக்கிறது.

‘இலுப்பைப் பூ’...
கடும் வறட்சியால் ஒரே இடத்திலிருந்து மாநகரம் முழுவதும் குடிநீர் விநியோகம் செய்ய முடியாமல் சென்னைக்கு மிக அருகாமை யிலுள்ள திருவள்ளூர் மாவட்ட விவசாயக் கிணறுகள், விளை நிலங்களிலிருந்து தினசரி 120 மில்லியன் லிட்டர் தண்ணீரும், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே சிக்கராயபுரம் கல் குவாரிகளிலிருந்து 30 மில்லியன் லிட்டர், போரூர் ஏரியிலிருந்து 40 மில்லியன் லிட்டர் என ஆங்காங்கே கிடைக்கும் நீர் ஆதாரங்களைக் கொண்டு அந்தந்த பகுதிகளுக்கு வழங்கப்படுகிறது. இது சுத்திகரிக்கப்படுகிறதா என்றால் இல்லை என்பதே  ஊழியர்களிடம் பதிலாக வருகிறது. ‘இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சக்கரை’யாக மாறிவிட்டது.

கேன் தண்ணீர் விலை கடும் உயர்வு
போதிய அளவுக்கு தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலத்தில் சுத்திகரிப்பும், குடிநீர் விநியோகமும் சீராக நடைபெற்று வந்தது. தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்தும் சுத்தகரிப்பு, விநியோகத்தில் சுத்தமில்லை. இந்த தண்ணீருக்கும் குடிநீர் வாரியத்தில் பதிவு செய்தால் ஒரு வாரம் கழித்துதான் கிடைக்கிறது. தனியார் லாரிகளுக்கு ஏகப்பட்ட கிராக்கி. 750 ரூபாய்க்கு  விற்பனை செய்து வந்த மினி லாரி தண்ணீர் தற்போது 1500 ரூபாய் கொடுத்தாலும் கிடைப்பதில்லை. வேறுவழியின்றி வீட்டுக்கு வீடு  குடிப்பதற்கு ‘கேன் வாட்டர்’ பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட கேன் தண்ணீரை ரூ.50 வரை உயர்த்திவிட்டனர்.  இந்த தண்ணீரும் கம்பெனிக்கு கம்பெனி விலை வேறுபடுகிறது. அக்வாபினா, கின்லே போன்ற கேன் வாட்டர் ரூ. 70 முதல் 80 வரை விற்கப்படுகிறது. 

உறிஞ்சப்படும் தண்ணீர்
தலைநகருக்கு மிக அருகாமை மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளில் விவசாய  விளைநிலங்களில் ராட்சத? போர்வெல் கிணறு அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்து வருகின்றனர். கிராம மக்கள் புகாரையடுத்து, நிலத்தடி நீரை வணிக நோக்கத்திற்கு  பயன்படுத்த அரசிடம் தடையில்லா சான்று பெறுவது கட்டாயம் என நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து தனியார் குடிநீர் விற்பனை நிறுவனத்தினர் நீதிமன்றத்திற்கு சென்றனர். தேசத்தின் சொத்தான நிலத்தடி நீரை வணிகத்திற்காக சட்டவிரோதமாக உறிஞ்சுவோர் மீது  திருட்டு வழக்குப்பதிந்து கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

காலியாகும் வீடுகள்
வீட்டுக்கு வீடு வாசப்படி இருக்கிறதோ இல்லையோ மின் மோட்டார் இணைப்புடன் போர்வெல் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கொளுத்தும் வெயிலால் போர்வெல் அனைத்தும் வறண்டு வருகின்றன. அடுக்குமாடி குடியிருப்புகளில் மாடிக்கு தண்ணீர் ஏற்றும் அளவிற்கு நீர் வரத்து இல்லை. இதனால் வீட்டின் உரிமையாளர்கள் அரசு  அனுமதியின்றி, வீட்டுக்கு வெளியில் தெரு சாலைகளை உடைத்து 300 முதல் 400 அடி ஆழம் வரைக்கும் புதிதாக போர்வெல் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. வசதி படைத்தவர்கள் ராட்சத போர்வெல்  அமைத்து கொஞ்ச நஞ்ச தண்ணீரையும் உறிஞ்சுகிறார்கள்.

சென்னையைப் பொருத்தவரை வாடகை வீடுகளில் தங்கி இருப்பவர்கள் அதிகம். இந்த தண்ணீர் பிரச்சனையால் பணம் உள்ளவர்கள் தண்ணீர் வசதியுள்ள குடியிருப்புகளை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். சொந்த வீடு வைத்துள்ளவர்கள் கூட வாடகை வீடு தேடி அலைந்து கொண்டிருக் கிறார்கள். குடிசை வாழ் மக்களின் நிலைமையும் வாடகைக்கு குடியிருந்து வரும் மக்கள் படும் பாடு சொல்லி மாளவில்லை. 

தண்ணீர் கிடைக்காத ஒரு நாளை எண்ணிப் பார்த்தோமானால் அனுபவிக்கும் எங்களுக்குத்தான் தெரியும். இப்போது இருக்கும் நிலை நீடித்தால் கூடிய விரைவில் வீடுகளை காலி செய்து கொண்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று அந்த மக்கள் புலம்புவதில் கடுகளவும் சந்தேகமில்லை. ‘கொடும கொடுமன்னு ஓடுனா கூடவே இரண்டு கொடும வந்த கதையாக’ கிராமங்களிலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுவதால் விழி பிதுங்கி நிற்கிறார்கள் மக்கள்.
கொட்டித்தீர்க்கும் மழையும், வாட்டி வதைக்கும் வெயிலும் சென்னைக்கு ஒன்றும் புதிதல்ல! என்றாலும் பருவமழை ஏமாற்றத்தால் அழகான சென்னை மாநகரம் அல்லோகலப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் அதள பாதாளத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. தமிழகத்தின் பெரும்பகுதி மாவட்டங்களில் வாட்டி வதைக்கும் வெயிலின் கொடுமையால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நிலைமை படுமோசமாகி வருவதை புரிந்துகொள்ளாத முதலமைச்சர்,  தண்ணீர் பிரச்சனை பற்றி கவலைப்பட தேவையில்லை என்று ‘வாயால் வடை சுடுவது’ மக்களிடம் மேலும் கோபத்தைதான் அதிகரித்திருக்கிறது.