சென்னை:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திமுக முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் வியாழனன்று (ஆக. 20) உயிரிழந்தார். அவருக்கு வயது 77.முன்னாள் அமைச்சரும், திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ரகுமான் கான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில் மாரடைப்புக் காரணமாக அவர் உயிரிழந்தார்.தேனி மாவட்டம் கம்பத்தில் பிறந்தவர் ரகுமான்கான். திமுகவின் சிறுபான்மை முகங்களில் ஒருவராக திகழ்ந்த ரகுமான்கான், சென்னை சேப்பாக் கம் தொகுதியில் 1977, 1980 மற்றும் 1984 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மீண்டும் 1989 -ல் சென்னை பூங்காநகர், 1996-ல் ராம்நாதபுரம் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
முதல்வர் கருணாநிதி அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.திமுகவின் தலைமை செய்தித் தொடர்பாளராகவும், உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினராகவும், தமிழக அரசின் சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழுவின் துணை தலைவராக இருமுறையும் பதவி வகித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் அமைச்சர் ரகுமானின் திருவுருவப் படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் அஞ்சலி செலுத்தினார்.ரகுமான்கான் மறைவுக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.