சென்னை:
தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப் பேற்றுள்ள மு.க. ஸ்டாலினுக்கு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:-
நோய்த் தொற்று அபாயம், முடங்கிப் போன சிறு, குறுந் தொழில்கள், கல்வித் துறை எதிர் கொள்ளும் சவால்கள், இட ஒதுக்கீடு, மாநில உரிமை பறிப்பு உள்ளிட்ட பல வகையான நெருக்கடிகளை மாநிலம் சந்தித்து வரும் சூழலில், மக்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது.ஒரு பேரிடர்க் காலத்தை மக்கள் துயர்த் தீர்க்க உடனடி தீர்வாக நிவாரணமும், அடுத்ததாக மறுகட்டமைப்பிற்கானத் திட்டங்களும், சட்டங்களும் தேவை.அந்த வகையில், பொறுப்பேற்ற முதல் நாளே நிவாரணத்திற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருப்பது மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தரக்கூடிய நடவடிக்கை.மக்களின் உயிரைக் காப்பாற்ற உயிர்வளி மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை தேவைப் படும் அனைவருக்கும் கிடைத்திட, போர்க் கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அதற்குத் தான் முன்னுரிமை. அந்த வகையில் மாண்புமிகு முதலமைச்சர் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை வரவேற்கிறோம், பாராட்டுகிறோம்.“மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்விஅருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்கருமமே கண்ணாயினார்” என்ற நீதிநெறி விளக்கப் பாடல் வரிகளுக்கான எடுத்துக் காட்டாக ஓய்வறிய சூரியனாக செயல்பட தொடங்கி இருக்கும் முதலமைச்சர் மக்கள் நலன் சார்ந்து மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற வாழ்த்துகளை பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தெரிவித்துக் கொள்கிறது.
கல்வியை மொத்தமாக வணிகமயமாக்கி, பெரும் பகுதி மக்கள் கூலித் தொழில் செய்யும் திறன் பெற்றால் போதும் என்பதற்கு வழிவகுக்கும் கல்விக் கொள்கையை விடுதலை இந்தியாவில் யாரும் எதிர்பார்க்கவில்லை. அத்தகைய அபாயம் தேசியக் கல்விக் கொள்கை 2020 என்ற வகையில் உருவெடுத்து உள்ளது.அடுத்தக் கல்வி ஆண்டு, இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள சூழலில், பள்ளிக் கல்வி, உயர்கல்வி இரண்டிலும் மாநில அரசு, தன் உரிமையை இழந்திடாமல் சமூகநீதியின் அடிப்படையில் சமமான கற்றல் வாய்ப்பை அனைவருக்கும் உறுதிப்படுத்த மாநிலக் கல்விக் கொள்கை வகுத்திடவும், அதற்கான மாநிலக் கல்வி ஆணையத்தை அமைத்திடவும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசிற்கு தலைமை ஏற்றுள்ள முதலமைச்சரை பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.