வருகின்ற 2026-27 மத்திய பட்ஜெட்டில், பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மைக்ரோ (மிகச்சிறு) தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க அவசரக் கொள்கை மற்றும் நிதித் தலையீடுகள் அவசியம் என்று Association of Indian Entrepreneurs (AIE) அமைப்பு ஒன்றிய நிதியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் கே.இ. ரகுநாதன் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சமர்ப்பித்துள்ள விரிவான கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
கடன் வசதி மற்றும் வட்டி சலுகை:
மைக்ரோ தொழில்களுக்கு ₹100 லட்சம் வரை எவ்வித பிணையமுமற்ற (Collateral-free) கடன் வழங்கப்பட வேண்டும்.
இந்தக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 6% முதல் 7% என்ற அளவில் உச்சவரம்பாக நிர்ணயிக்க வேண்டும்.
ஜிஎஸ்டி (GST) இணக்கமான நிறுவனங்களுக்கு புதிய மதிப்பீடு ஏதுமின்றி வேலைமூலதன வரம்புகளை (Working Capital) கட்டாயம் புதுப்பிக்க வேண்டும்.
வரி மற்றும் இணக்கச் சீர்திருத்தங்கள்:
ஜிஎஸ்டி விலக்கு வரம்புகளை உயர்த்துவதோடு, மைக்ரோ நிறுவனங்களுக்கு 'ஒற்றை எளிய ஜிஎஸ்டி அறிக்கை' முறையை அறிமுகப்படுத்த வேண்டும்.
ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை 15 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்; தாமதமானால் அரசு வட்டி வழங்குவதைக் கட்டாயமாக்க வேண்டும்.
சிறிய நடைமுறைத் தவறுகளுக்காக மைக்ரோ தொழில்முனைவோர் மீது வழக்குத் தொடருவதைத் தவிர்த்து, முழு குற்றமற்றாக்கம் (Decriminalization) செய்ய வேண்டும்.
கட்டமைப்பு மற்றும் சந்தை வாய்ப்புகள்:
மாவட்ட அளவில் 'பிளக் அண்ட் பிளே' (Plug-and-Play) மைக்ரோ தொழில் பூங்காக்கள், பொதுத் தேர்வுக் கூடங்கள் மற்றும் கிடங்குகளை அமைக்க வேண்டும்.
அரசு கொள்முதலில் குறைந்தபட்சம் 30% மைக்ரோ தொழில்களிடமிருந்து பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
மைக்ரோ அலகுகளுக்கான மின்சார நிலைச் சுமை மற்றும் பீக்-ஆவர் (Peak-hour) அபராதங்களைக் குறைக்க வேண்டும்.
சமூகப் பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பு:
புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மைக்ரோ நிறுவனங்களுக்கு, முதல் 3 ஆண்டுகளுக்கு இபிஎஃப் (EPF) மற்றும் இஎஸ்ஐ (ESI) பங்களிப்பை அரசே ஏற்க வேண்டும்.
சுயதொழில் முனைவோருக்கு ஓய்வூதியம், சுகாதாரக் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீடு வழங்கப்பட வேண்டும்.
உலகளாவிய பொருளாதார அதிர்வுகள்:
சர்வதேசப் பொருளாதார மாற்றங்களால் பாதிக்கப்படும் ஏற்றுமதியாளர்களுக்கு 'ஏற்றுமதி அபாயச் சமன்படுத்தும் நிதி' (Export Risk Equalisation Fund) போன்ற பாதுகாப்புத் திட்டங்களை உருவாக்க வேண்டும்.
"மைக்ரோ தொழில்கள் நாட்டின் உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பின் அடித்தளம். இவை பலவீனமடைந்தால் உள்நாட்டுப் பொருளாதாரத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும். எனவே, 2026-27 பட்ஜெட்டில் இந்தத் துறையினரை வெறும் 'பிந்தைய சிந்தனையாக' (Afterthought) கருதாமல், பொருளாதாரக் கட்டமைப்பாகக் கருத வேண்டும்" என கே.இ. ரகுநாதன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
