கேரளத்தில் இரு கிறிஸ்தவ குழுக்களுக்கு இடையே நடைபெற்ற மோதல் குறித்து தமிழ் ஜனம் செய்தி சேனல் பொய்யாக செய்தி வெளியிட்டுள்ளது.
கேரள மாநிலம், ஆலப்புழாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட த்தின் போது கரோல்(பாட்டு பாடிக்கொண்டே செல்லும்) குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் பத்து பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் புதன்கிழமை இரவு 11.30 மணியளவில் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியில் உள்ள 'யுவா' (Yuva) மற்றும் 'லிபர்ட்டி' (Liberty) கிளப்கள் தலைமையிலான கரோல் குழுக்களுக்கு இடையே இந்த மோதல் வெடித்தது.
யுவா கிளப்பிலிருந்து பிரிந்து சென்ற உறுப்பினர்களால் லிபர்ட்டி கிளப் உருவாக்கப்பட்டது. கரோல் ஊர்வலத்தின் போது இரு குழுக்களுக்கும் இடையே ஏற்பட்ட வாய்மொழித் தகராறு, பின்னர் வன்முறை மோதலாக மாறியது.
குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது அப்பகுதியில் நிலைமை கட்டுக்குள் இருந்தாலும், மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆனால் இதுகுறித்து செய்தி வெளியிட்ட சங்பரிவாரத்தின் தமிழ் ஜனம் என்கிற செய்தி சேனல் கிறிஸ்தவ கொண்டாட்டத்தின் போது, கிறிஸ்தவர்களை கம்யூனிஸ்டுகள் தாக்கியதாக பொய்யாக செய்தி வெளியிட்டுள்ளது.
