ஒடிசா மாநிலம் சம்பல்பூரில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம்பெயர் கட்டடத் தொழிலாளி ஒருவரை “வங்கதேசத்தைச் சேர்ந்தவர்” என கூறி தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ஜுவால் ராணா (20) சம்பல்பூரில் கட்டடத் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். புதன்கிழமை மாலை நண்பர்களுடன் தேநீர் கடைக்கு சென்றபோது, குடிபோதையில் இருந்த சிலர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, “நீ வங்கதேசத்தைச் சேர்ந்தவன்” என கூறி தாக்கத் தொடங்கியுள்ளனர்.
அப்போது தனது அடையாளத்தை நிரூபிக்க ஜுவால் ராணா ஆதார் அட்டையை காட்ட முயன்றபோது, அவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ஜுவால் ராணா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அவருடன் இருந்த மேலும் இரு தொழிலாளர்களும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சம்பல்பூருக்கு அண்டை மாவட்டமான ஜார்சுகுடா காவல்துறை, சட்டவிரோத குடியேற்றம் என்ற சந்தேகத்தில் 444 பேரை பிடித்தது. ஆனால் விசாரணையில், அவர்களில் பெரும்பாலானோர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்பது உறுதிசெய்யப்பட்டது
