மின்னணு வாக்குப்பதிவு கருவி செயல்முறை விளக்க மையங்கள்
சென்னை, ஜன. 22– இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, நடைபெறவுள்ள 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவியினை பயன்படுத்துவது குறித்த செயல்முறை விளக்க மையங்கள் புதனன்று (ஜன.21) முதல் அமைக்கப்பட்டுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் எவ்வாறு வாக்களிப்பது மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகளில் வாக்களித்த விவரங்களை எவ்வாறு தெரிந்து கொள்வது என்பது குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், இந்த கருவிகளின் செயல்விளக்கம் அளிப்பதற்காக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான செயல்முறை விளக்க மையங்கள் சென்னை மாவட்டத்தில் சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கிண்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய 7 மண்டலங்கள் என மொத்தம் 10 இடங்களில் புதனன்று முதல் வாக்காளர்களுக்கு விழிப்புணர்விற்காக செயல்முறைக்கு வைக்கப்பட்டுள்ளது.
38 காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம்
சென்னை, ஜன. 22 சென்னையில் நிர்வாக வசதிக்காக 38 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார். ராயபுரம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் காதர் மீரா மாதவரம் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், திரு.வி.க.நகர் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் கிருபாநிதி மதுரவாயல் குற்றப்பிரிவுக்கும், எஸ்பிளனேடு ஆய்வாளர் பிரபு புழல் குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். அதேபோல், பாண்டி பஜார் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் புஷ்பராஜ் மீனம்பாக்கம் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், கொத்தவால்சாவடி சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ராஜன் வளசரவாக்கம் குற்றப்பிரிவுக்கும், அடையார் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் இளங்கனி நொளம்பூர் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் வேளச்சேரி சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ஜெயராம் மதுரவாயல் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், வானகரம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் மகேஷ்வரி கோயம்பேடு சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து சென்னை முழுவதும் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்த மொத்தம் 38 காவல் ஆய்வாளர்கள் புதிய இடங்களுக்கு மாற்றப்பட்டு, உடனடியாக பணியில் இணைய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் குறைதீர் கூட்டம் '
காஞ்சிபுரம், ஜன.22- காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளியன்று (ஜன. 23) காலை 11 மணிக்கு ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் வேளாண் வல்லுநர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்று விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு விளக்கமளிக்க உள்ளனர். இதில் பங்கேற்கும் விவசாயிகள் தனித்துவ அடையாள எண் (டிஜிட்டல் பார்மர் ரிஜிஸ்ரி) பெற ஆதார் மற்றும் சிட்டா விவரங்களுடன் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மினி பேருந்து சேவை தொடக்கம்
திருவள்ளூர், ஜன.22- திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி - ஆரணி இடையே புதிய மினி பேருந்து சேவை பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 9-ஆம் தேதி பாடியநல்லூரில் நடைபெற்ற 'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத் தொடக்க விழாவில், ஆரணி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி பிரியங்கா என்பவர் இப்பகுதிக்கு போதிய பேருந்து வசதி இல்லாதது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் கோரிக்கை விடுத்தார். மாணவியின் கோரிக்கையை ஏற்று முதல்வர் உடனடியாக உத்தரவிட்டதன் அடிப்படையில், தற்போது மினி பேருந்து சேவை நடை முறைக்கு வந்துள்ளது. இதனை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உரிய நேரத்திற்குச் செல்ல வழிவகை செய்த முதல்வ ருக்கு, மாணவி பிரியங்கா மற்றும் அப்பகுதி மக்கள் தங்கள் நன்றியைத் தெரி வித்துள்ளனர்.
காளை முட்டியதில் இளைஞர் உயிரிழப்பு
வேலூர், ஜன.22- வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை அடுத்த ஏரிகுத்தி கிராமத்தில் 61-ஆவது ஆண்டு மாடு விடும் திருவிழா புதனன்று (ஜன.21) வெகு விமரிசையாக நடை பெற்றது. 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற இந்த விழாவைக் காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டி ருந்தனர். அப்போது கள்ளிச்சேரி பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (34) என்ற இளைஞரை காளை மாடு ஒன்று எதிர்பாராத விதமாக முட்டியதில் அவர் பலத்த காயமடைந்தார். உடனடியாக பேரணாம் பட்டு அரசு மருத்துவ மனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழாவின் போது போதுமான பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்ததா, பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டதா மற்றும் எதனால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அருண்குமாரின் உடல் பிரேதப் பரிசோத னைக்காக வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலை யில், விசாரணை முடிவின் அடிப்படையில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக்: பொதுமக்கள் எதிர்ப்பு
விழுப்புரம், ஜன. 22- விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், நரசிங்கராயன்பேட்டை கிராமத்தில் தங்கள் பகுதியில் இரண்டாவதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். ஆட்சியரிடம் கொடுத்த மனுவில், “நரசிங்கராயன் பேட்டை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் ஏற்கனவே ஒரு டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. இந்நிலையில், அங்கு புதிதாக அமைந்துள்ள ரயில்வே சிட்டி மனைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அங்கு மேலும் ஒரு புதிய டாஸ்மாக் கடை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, கடை வைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இது குடியிருப்புகளின் மையப்பகுதியில் அமைகிறது. ஏற்கனவே ஒரு மதுக்கடை உள்ள நிலையில், மீண்டும் எங்கள் ஊராட்சியில் மேலும் ஒரு டாஸ்மாக் கடை திறக்க உள்ளனர். இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவிகள் வெளியே சென்று வர மிகவும் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியபடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் உள்ள இடங்களில் கூடுதலாகப் புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்குத் தடை விதிக்க வேண்டும்” என அந்தப் பகுதி மக்கள் மனுவில் கூறியுள்ளனர்.