tamilnadu

தபால் வாக்குகள் அளிப்பதில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மெத்தனம்: ஆசிரியர்கள் கொதிப்பு

சென்னை, ஏப்.8-

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் மூ.மணிமேகலை, பொதுச்செயலாளர் ச.மயில், மாநிலப்பொருளாளர் க.ஜோதிபாபு ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை வருமாறு: பதினேழாவது நாடாளுமன்றத் தேர்தலுக்குரிய பணிகள் வெகுவேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் பத்து தினங்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடும்ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்குகள் அளிப்பதில் தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மிகுந்த மெத்தனப் போக்குடனும் காழ்ப்புணர்ச்சியுடனும் நடந்து வருகின்றனர். இதனால் லட்சக்கணக்கான ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.தேர்தல் ஆணையம் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்வதற்குரிய பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் தேர்தல் பணிக்குச் செல்லும் அலுவலர்களுக்கே தங்கள் வாக்கைச் செலுத்தும் உரிமை மறுக்கப்படுவது என்பது திட்டமிட்ட செயலாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.24.03.2019 மற்றும் 31.03.2019 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் தேர்தல் பயிற்சி வகுப்பில் தபால் வாக்குக்கோரி படிவம் 12-ல்விண்ணப்பித்த ஆசிரியர்கள் மற்றும் அரசுஊழியர்களில் பெரும்பாலோருக்கு 07.04.2019-ல் நடைபெற்ற இரண்டாவது பயிற்சிவகுப்பில் தபால் வாக்குகள் அளிக்கப்படவில்லை. மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே தபால் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளது.


இதனால் மாநிலம் முழுவதும் தேர்தல் பணியில்ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியும், கொந்தளிப்பும், ஏமாற்றமும் ஏற்பட்டுள்ளது.அதேபோன்று சொந்த நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் பணியாற்றும் தேர்தல் பணியாளர்கள் முதல் பயிற்சி வகுப்பில் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கும் தேர்தல் பணிச்சான்று (நுடநஉவiடிn னரவல உநசவகைiஉயவந) வழங்கப்பட்டு அவர்கள் பணியாற்றும் வாக்குச்சாவடியிலேயே வாக்களிக்கும் வாய்ப்பும் வழங்கப்படுமா என்ற சந்தேகம் தமிழகம் முழுவதும் தேர்தல் பணிக்குச்செல்லும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளது.தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் இந்தியக் குடிமக்கள் என்ற முறையில் வாக்களிக்கும் உரிமைபெற்றவர்கள். அவ்வுரிமையை யாராலும் தட்டிப்பறிக்க முடியாது. அவ்வாறு தட்டிப்பறிப்பது என்பது மிகப்பெரிய தேசவிரோதச் செயலாகும். தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களின் வாக்குகளைப் பறித்துவிட்டு, 100 சதவீதம் வாக்குப்பதிவை எட்டுவது என்பது எவ்வாறு சாத்தியமாகும். எனவே, தேர்தல் ஆணையம் இப்பிரச்சனையில் உடனடி கவனம் செலுத்தி தேர்தல் பணியில் ஈடுபடும்அனைத்து ஊழியர்களும் தபால் வாக்குகள் மூலமாகவோ அல்லது தேர்தல் பணிச்சான்று மூலமாகவோ தங்கள் வாக்கைச் செலுத்தி தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.