புதுதில்லி:
சுங்கச்சாவடிகளில் மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் பாஸ்டேக் முறையை மத்திய அரசு அவசர கதியில் கொண்டுவந்தது. கொரோனா கால நெருக்கடியிலிருந்து முழுமையாக மீண்டுவராத நிலையில் மத்திய அரசு இதனை கட்டாயமாக அமலுக்கு கொண்டுவந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி விட்டு, 2 மடங்கு கட்டணம் வசூலிக்கும் பாஜக அரசின் நடவடிக்கையால் வாகன ஓட்டிகள் கொதிப்படைந்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம், மத்தியப்பிர தேசம், உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்களிடம் 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப் பட்டது. இதனால் கோபமடைந்த வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தமிழகத்தில் போரூர், செங்கல்பட்டு அருகே பரனூர்சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் ஸ்டிக்கர்ஒட்டாத வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிறுத்தப்பட்டன. பாஸ்டேக் ஒட்டியும் போதிய பணம் இருப்பு இல்லாத வாகன ஓட்டுநர்களிடம் 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது.கோவை கணியூர் மற்றும் திருச்சி சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்களிடம் 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால்கடும் சிரமங்களை சந்தித்து வரும் நிலையில் டிஜிட்டல் பரிவர்த்தனை என்ற முறையில் சுங்கச்சாவடிகளில் பணம் அதிக அளவில் வசூலிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டினர். ஒவ்வொரு சுங்கச்சாவடிக்கும் இரண்டு மடங்கு கட்டணம் செலுத்தினால் வாகனத்தை விற்க வேண்டிய நிலைதான் ஏற்படும் என்று தெரிவித்தனர்.