சென்னை;
அரசு அறிவித்திருக்கும் ஊரடங்கு காலத்தில் தொழில் இல்லாமல் பாதிக்கப் பட்டிருக்கும் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க இ பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் ரூ.7500 நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்புவை சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன், பொதுச்செயலாளர் சிவாஜி ஆகியோர் சந்தித்து கோரிக்கை வழங்கினர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க மே 10 லிருந்து முழு ஊரடங்கு என்பது அறிவிக்கப்பட்டு, ஆட்டோக்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. 5.6.2021 அன்றும், 11.6.2021 அன்றும் முதல்வரால் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இரண்டு பேர்களுடன் ஆட்டோக் கள் இயக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.கொரோனா காலம் என்பதால் ஓட்டுநருடன் இரண்டு பேர் என்பதை தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு ) வரவேற்கிறது. அதே நேரத்தில் இ- பதிவு செய்துதான் ஆட்டோவில் பயணிகள் பயணிக்க வேண்டும் என்ற அறிவிப்பானது ஆட்டோ தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் கடுமையான நெருக்கடியை தந்துள்ளது என்பதை தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.கடைகளுக்கோ, அரசு அலுவலகங்களுக்கோ ஆட்டோவை பயன்படுத்தும் மக்களுக்கு இ-பதிவு முறையானது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே முதல்வரால் இ-பதிமுறை இல்லாமல் ஆட்டோவில் பயணிக்கலாம் என்று அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
மேலும் இதே போன்ற அறிவிப்புதான் இதர பகுதி மோட்டார் தொழிலாளர்களுக்கும் உதவும் என்பதால் பயணிக்கும் எண்ணிக்கையை தாங்கள் அறிவித்தது போல் நிர்ணயம் செய்து இ-பதிவு முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டுகிறோம்.மேலும் முற்றாக வாழ்வாதாரம் இழந்துள்ள ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்க ஆட்டோ தொழிலாளர் நலவாரியத்தில் இருக்கும் பணத்தை விடுவித்து, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் பெற்ற அனைவருக்கும் மாதம் ரூ.7.500 வீதம், கொரோனாவால் ஆட்டோ தொழில் பாதிக்கின்ற காலத்திற்கு நிவாரண நிதியாக வழங்க வேண்டுகிறோம்.வாகனங்களுக்கு எப்சி எடுக்கும் காலம், ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கும் காலம் உள்ளிட்ட அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலக பணிகளுக்கும் 2021 டிசம்பர் வரை கால நீடிப்பு செய்வதோடு, ஈஎம்ஐ செலுத்துவதற்கான காலத்தையும் 2021 டிசம்பர் 31 வரை நீடிப்பு செய்து அறிவிக்க வேண்டுகிறோம்.இந்த கோரிக்கையை நிறைவேற்றி தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முன்வர வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.