மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:
தமிழகத்தின் மூத்த தமிழறிஞரும், ஆய்வாளருமான இரா.இளங்குமரனார் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.ஒரு துவக்கப்பள்ளி ஆசிரியராக தன்னுடைய கல்விப்பணியை துவங்கிய அவர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் முதுமுனைவர் பட்டம் கொடுத்து கவுரவிக்கப்பட்டவர். ஒரு பல்கலைக்கழகம் செய்யக்கூடிய அளவுக்கான பணியை தன்னுடைய தனி மனித உழைப்பால் செய்து முடித்தவர். தமிழ் இலக்கியம், இலக்கணம், ஆய்வு என பல்வேறு துறைகளில் ஐநூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் 14 தொகுதிகள் நூலை உருவாக்கியவர். தமிழ் இலக்கணத்தில் ஆழ்ந்த புலமை கொண்ட அவர், தமிழ் இலக்கண வரலாறு உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். அவருடைய மறைவு தமிழ் இலக்கிய ஆய்வுலகிற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
படக்குறிப்பு : மறைந்த தமிழறிஞர் இளங்குமரனார் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.