india

img

தோழர் மைதிலி சிவராமன் மறைவு... சிபிஎம் அரசியல் தலைமைக்குழு இரங்கல்....

வாச்சாத்தி வன்கொடுமையை எதிர்த்த போராட்டத்தில் வெற்றியை நிலைநாட்டுவதற்கான பல்வேறு வரலாற்று புகழ்மிக்க நடவடிக்கைகளில் தோழர்.மைதிலி சிவராமன் அவர்களின் செயல் முக்கியமானது. 1992 ஜூலை 31ஆம் தேதி தோழர்கள் பாப்பா உமாநாத், மைதிலி சிவராமன், பங்கஜவல்லி உள்ளிட்ட தோழர்கள் வாச்சாத்தி கிராமத்தில் நடைபெற்றிருந்த கொடுமைகளை பார்க்கவும், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து விபரங்களை அறிந்து கொள்ளவும் வாச்சாத்தி கிராமத்திற்கு வந்திருந்தனர்.

தோழர்.மைதிலி அவர்கள் அப்போது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயல்தலைவராக இருந்தார். தோழர்.பாப்பா உமாநாத் பொதுச் செயலாளர். கிராமத்தில் பார்த்ததையும்- மக்களிடம் கேட்டறிந்ததையும் தொகுத்து ஒரு மனுவாக தயாரித்து ஆகஸ்ட்-3ஆம் தேதி தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் இயக்குநர் திருமதி.பாமதி ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு அனுப்பி வைத்தார். அத்துடன் தேசிய ஆணையத்தின் தலைவருக்கும் இம்மனுவினை அனுப்பி இருந்தார். இந்த மனு வாச்சாத்தி வழக்கில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது… ஆம்! இந்த மனுவின் அடிப்படையில் தான் ஆகஸ்ட் 6,7,8 ஆகிய தேதிகளில் இயக்குநர் பாமதி அவர்கள் வாச்சாத்தி கிராமத்திற்கு நேரில் வந்து விசாரணை செய்தார். விசாரணை அறிக்கையை அவர் தேசிய ஆணையத்திற்கு அனுப்பினார். அப்போது, நாம் முன் வைத்திருந்த அனைத்து குற்றச்சாட்டுக்களையும் உறுதி செய்யும் வகையில் அவருடைய அறிக்கை இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறையைச் சார்ந்தவர்கள் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்கள். நாங்கள் தமிழக முதல்வர் உள்ளிட்ட தமிழக அதிகாரிகளுக்கு மனுக்களை அனுப்பிக் கொண்டிருந்தோம். மற்றொரு பக்கம் போராட்டங்களையும் நடத்திக் கொண்டிருந்தோம். அன்றைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்று முழுப்பூசணிக்காயை இலைச்சோற்றில் மறைக்க முயற்சித்ததை நாடறியும்.

இந்த நிலையில், தமிழக அரசுக்கு சம்பந்தமில்லாத தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் இயக்குநர் கவனத்திற்கு இதை கொண்டு சென்றதும் அவர் ஒரு சுயேட்சையான விசாரணையை மேற்கொண்டு அறிக்கை அளித்ததும், தமிழக முதலமைச்சரின் வாயை அடைத்தது என்று சொல்லலாம். பிறகு, சென்னை உயர்நீதிமன்றம் ஒருநபர் விசாரணைக்கு உத்தரவிட்ட போது விசாரணை அதிகாரியாக திருமதி. பாமதி ஐ.ஏ.எஸ் மீண்டும் கிராமத்திற்கு சென்றார். ஒரு மிக விரிவான அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கை, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் எழுப்பப்பட்டிருந்த அனைத்து குற்றச்சாட்டுக்களையும் உறுதிப்படுத்தியிருந்தது. அத்துடன், ஒரு திறமை வாய்ந்த புலனாய்வு அமைப்பு மூலம் பாலியல் வன்புணர்வு குற்றம் உள்ளிட்டவைகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று தனது பரிந்துரையில் குறிப்பிட்டிருந்தார். 

சென்னை உயர்நீதிமன்றம் வாச்சாத்தி வன்கொடுமை தொடர்பான வழக்கில் மத்திய புலனாய்வு பிரிவு விசாரணைக்கு உத்தரவிட திருமதி.பாமதி அவர்களை வாச்சாத்தி வழக்கில் ஈடுபடுத்தியது தோழர்.மைதிலி சிவராமன் அவர்களின் ஆகஸ்ட்-3ஆம் தேதியிட்ட மனு என்பதை பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன். அது மட்டுமல்லாமல், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நீட்டித்துக் கொண்டே இருந்த நிலையில் வழக்கை விரைந்து விசாரிக்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்தியது தோழர்.மைதிலி அவர்கள். வாச்சாத்தி கிராமத்திலிருந்து சுமார் 200 பெண்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் வந்து கலந்து கொண்டனர். அவர்களுடன் சென்னையிலிருந்து ஏராளமான மாதர் சங்க தோழர்கள் பங்கேற்றனர். இது மட்டுமல்லாமல் கிருஷ்ணகிரி அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற போது சாட்சியமளிக்க தோழர்.மைதிலி நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். 2004 ஜனவரி 6ஆம் தேதி அவர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார். “பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக போராடுவதும், அவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதும் எங்கள் அமைப்பின் நோக்கம்.

அந்த அடிப்படையிலேயே வாச்சாத்தி பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனையிலும் நாங்கள் தலையிட்டோம்” என்று குறிப்பிட்டார். அதுமட்டுமல்லாமல், இதுபோன்ற சம்பவங்கள் எங்கள் கவனத்திற்கு வரும் போது, “நேரில் சென்று விபரங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், அதற்கான ஆதாரங்களை சேகரிப்பதும் எங்கள் வழக்கம். அதன் அடிப்படையிலேயே 1992 ஜுலை 31ஆம் தேதி நாங்கள் வாச்சாத்தி கிராமத்திற்கு சென்றோம்” என்று கூறியுள்ளார். வெண்மணியில் வெந்துமடிந்த தலித் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்வதில் முக்கிய பங்காற்றினார். வாச்சாத்தி பழங்குடி பெண்களின் நீதிக்கான போராட்டத்திலும் முத்திரைப் பதித்தவர். இவ்வுலகம் உள்ளவரை உழைக்கும் மக்களின் போராட்டங்களில் தோழர்.மைதிலி சிவராமன் அவர்கள் வழிக்காட்டும் ஒளிவிளக்காக விளங்குவார். வாச்சாத்தி கிராம மக்களின் சார்பிலும், ஒட்டுமொத்த தமிழக ஆதிவாசி மக்களின் சார்பிலும் தோழருக்கு செவ்வணக்கம் செலுத்துகிறேன்.

கட்டுரையாளர் :  பெ.சண்முகம், மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்