சென்னை:
ஜனநாயகத்திற்கும் ஊடக சுதந்திரத்திற்கும் எதிரான அச்சுறுத்தலை முறியடிக்க அனைத்துத்தரப்பினரும் ஒன்றுபட வேண்டும் என்று டியுஜெ வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு யூனியன் ஆப் (டியுஜெ) ஜர்னலிஸ்ட்ஸ் மாநில தலைவர் பிஎஸ்டி. புருஷோத்தமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஊடகச் சுதந்திரத்திற்கான பன்னாட்டு தரவரிசை குறியீட்டில் இந்தியா பின்னோக்கிச்சென்று கொண்டிருக்கிறது. ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் சுதந்திரமாக செயல்பட முடியாமல் பெரும் அச்சுறுத்தலை சந்தித்து வருகின்றனர். அரசு அதிகாரத்தின் மூலம் ஊடகங்களுக்கு நெருக்கடியை கொடுப்பது, சமூகவலைத்தளங்களில் ஆதாரமில்லாமல் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டு ஊடகவியலாளர்களின் தொழில்முறை நேர்மையை (Professional honest) கேள்விக்குள்ளாக்குவது, அதனைக் காட்டியே அவர்களை பணியில் நீடிக்க விடாமல் செய்வது போன்ற உத்திகளை சில சக்திகள் தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றன.
மக்களின் பிரச்சனைகளுக்கும் பல்வேறுதரப்பினரின் கருத்துகளுக்கும் இடமளிக்கக்கூடிய ஊடகவியலாளர்களின் அணுகுமுறையை, ஒற்றைத் தன்மை கொண்டதாகவும் தாங்கள் விரும்பும் கோணத்தில் இருக்கும் வகையிலும் மாற்ற அவர்கள் முயற்சிக்கின்றனர்.இதற்கு ஏற்ப வளைந்து கொடுக்காதவர்கள் மீது சாதி, மதம், மொழி, இனம், சித்தாந்த அடிப்படையில் அவதூறு பரப்புரையை அவிழ்த்துவிட்டு அவர்களை வெளியேற்ற நிர்ப்பந்தப்படுத்தி அவர்களின் இருப்பையே சிக்கலுக்கு உள்ளாக்கத் துணிகின்றனர். ஊடகவியலாளர்களுக்கு பணிப் பாதுகாப்பும் கருத்துரிமையும் இல்லாவிட்டால் ஊடக சுதந்திரம் எங்கே இருக்கும்? நாடும் சமூகமும் ஜனநாயகத்துடன் இருப்பதற்கான அடையாளம் குறியீடு தான் ஊடக சுதந்திரம். ஊடகவியலாளர்களின் கருத்துரிமையையும் பணிப் பாதுகாப்பையும் உறுதி செய்வதன் மூலம் தான் ஊடகச்சுதந்திரத்தை பேண முடியும். ஊடகவியலாளர்கள் இனம், மதம். சாதிகளுக்கு அப்பாற்பட்டவர்கள்.எனவே ஜனநாயகத்திற்கும் ஊடகச் சுதந்திரத்திற்கும் எதிரான அச்சுறுத்தலை முறியடிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்என வேண்டுகோள் விடுக்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.