tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : தீரன் சின்னமலை பிறந்த நாள்...

தீரன் சின்னமலை ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் வட்டம் சென்னிமலை அருகிலுள்ள செ.மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் 1756 ஏப்ரல் 17,  அன்று பிறந்தவர். இவரது இயற்பெயர் தீர்த்தகிரி. இளவயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்றபோர்ப் பயிற்சியை  கற்றுத் தேர்ந்தார். இன்றைய கேரளத்திலும் கொங்கு நாட்டின்சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்தியகம்பெனிப்படை ஒன்று சேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலைவிளங்கினார். 1782 டிசம்பர் 7-ல் ஹைதரலியின் மறைவிற்குப் பின் திப்பு சுல்தான் மைசூர் சீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்துகிழக்கிந்தியக் கம்பெனியினரை எதிர்த்துக்கடும் போர் செய்து வந்தார்.

மாவீரன் சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார். சின்னமலையின் கொங்குப்படை சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில்திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது.குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைகட்குக் கொங்குப்படை பெரும் சேதத்தை உண்டாக்கியது. நெப்போலியனிடம் படை உதவி கேட்டுத் திப்பு சுல்தான் அனுப்பிய தூதுக்குழுவில் சின்னமலையின் மெய்க்காப்பாளர் கருப்பசேர்வையும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.நான்காம் மைசூர்ப் போரில் 1799 மே 4 -இல்  திப்பு சுல்தான் போர்க்களத்தில் வீரமரணம் எய்திய பின் சின்னமலை கொங்குநாடு வந்து அரச்சலூர் அருகே ஓடாநிலைக் கோட்டை கட்டிப் போருக்குத் தயார் ஆனார்.

ஏற்கனவே ஏப்ரல் 18, 1792-ல் தான் வாங்கியசிவன்மலை - பட்டாலிக் காட்டில் வீரர்கட்குப் பயிற்சி அளித்தார். ஆயுதங்கள் தயாரித்தார். ஓடாநிலையில் பிரெஞ்சுக்காரர் துணையோடு பீரங்கிகளும் தயாரிக்கப்பட்டன. தீர்த்தகிரிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் என்று சின்னமலை தன்னைப் பாளையக்காரராக அறிவித்துக் கொண்டு கொங்குநாட்டுப் பாளையக்காரர்களை ஓரணியில் சேர்க்க முற்பட்டார். போராளிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி விருப்பாச்சி கோபால நாயக்கர், திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக், பரமத்தி அப்பாச்சி ஆகியவர்களோடு இணைந்து ஜூன் 3, 1800 அன்று கோவைக்கோட்டையைத் தகர்த்து அங்கிருந்து லெப்டினன்ட் கர்னல்கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ஆம்பட்டாளத்தை அழிக்க கோவைப்புரட்சிக்குச் சின்னமலை திட்டமிட்டார். ஆனால்போராளிகள் அணியில் சிலர் முந்தியநாளே அறிவிப்பின்றிச் சண்டையைத் தொடங்கியதால் கோவைப்புரட்சி தோல்வியுற்றது.

1801-ல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-ல் ஓடாநிலையிலும், 1804-ல் அரச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். சின்னமலையின் ஓடாநிலைக் கோட்டையைத் தகர்க்கக் கள்ளிக்கோட்டையிலிருந்து மிகப்பெரும் அளவில்பீரங்கிப்படை வந்தது. சுபேதார் வேலப்பன்அறிவுரைப்படி சின்னமலை ஓடாநிலையிலிருந்து தப்பிப் பழனிமலைத் தொடரில் உள்ள கருமலை சென்றார்.சின்னமலையை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக்கோட்டைக்குக் கொண்டு சென்று போலிவிசாரணை நடத்தி ஜூலை 31, 1805 அன்றுதூக்கிலிட்டனர். அவருடன் சின்னமலையின் தம்பியர்களும், படைத்தலைவர் கருப்பசேர்வையையும் தூக்கிலிட்டனர்.

 பெரணமல்லூர் சேகரன்